பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஔவையார் தனிப்பாடல்கள்



கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டுபோல் நிற்கப் பணி.

"கூர்மையான அரிவாளினாலே வெட்டப்பெற்ற வளைந்த இந்தப் பலா மரமானது, ஓர் இலை துளிர்த்ததாகிப்பின் கிளைகள் விட்டதாகிப் பின் உயரிய மரமும் ஆகிப்,பின் சிறந்த வண்டு போலத் தோன்றும் கொட்டையாய்ப் பின் வன்மையான காயாகிப் பின் பழமும் ஆகி, முன் நின்றதுபோல முழுப் பலா மரமாகவே நிற்பதாக” என்பது பொருள்.

11. என் உள்ளம்!

பலா மரம் மீண்டும் பழையபடியே வளர்ந்து பசுமையாக நின்றது. குறவன் அவர் காலடிகளில் வீழ்ந்தான். 'தன்னைக் காப்பாற்ற வந்த தெய்வம்' என்று அடிபட்டவள் போற்றினாள். சூது செய்தவள் அஞ்சிச் சரணடைந்தாள். தன் பிழைக்கு வருந்தி மன்னிக்குமாறு மன்றாடினாள். ஒளவையார் மிகவும் உருகிப் போனார். ஒன்றுபட்டு வாழும்படியாகக் கூறி அவர்களை வாழ்த்தினார்.

குறவனும் அவன் மனைவியரும் ஒளவையாரைப் போற்றி விருந்தளித்து, தன் இனத்தோடும் ஒருங்குகூடி விழாக் கொண்டாடினார்கள். ஒளவையாரும் அந்தக் கள்ளங்கபடமற்ற மக்களின் தூய்மையான அன்பிலே திளைத்து உவந்தார்.

அவர்களிடம் விடைபெற்று, மீண்டும் சோழனிடம் செல்ல ஒளவையார் விரும்பியபோது, குறவர் குடியினர் வருத்தமுற்றனர். பிரியா விடைதந்து பணிந்து நின்றனர். குறச் சிறுவர்கள் தம் காணிக்கையாக ஒரு படி தினையரிசியை அவருக்கு வழங்கினார்கள்.

அந்த அன்பின் சின்னத்தைத் தம் மடியிற் கொண்டவராகச் சோழனிடம் வந்து கொண்டிருந்தார் ஒளவையார்.

சோழன் ஒளவையார்பால் தோன்றிய பெருமிதத்தைக் கண்டு வியந்தான். அவர் மடியின் கனம் அவன் கண்ணிலும் பட்டது.

"அம்மையே! எங்கிருந்து வருகிறீர்கள்? மடியின் கனம் மிகுதியாயுள்ளதே? அது என்னவோ?" சோழன் ஆர்வத்துடன் கேட்டான்.

ஒளவையார் சிரித்தார். "அது அன்பின் பெருஞ்செல்வம்!" என்றார்.