பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.ir

249

IRQ conflict



.ir : ஐஆர் : ஒர் இணைய தள முகவரி. ஈரான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

IRGB : ஐஆர்ஜிபி : அடர்வுச் சிவப்பு பச்சை நீலம் என்று பொருள்படும் (Intensity Red Green Blue) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். முதன் முதலில் ஐபிஎம்மின் சிஜிஏ (Colour Graphics Adapter) அட்டைகளில் பயன்படுத்தப்பட்ட நிறக் குறியீட்டு முறை. அதன் பிறகு இஜிஏ (Enhanced Graphics Adapter) மற்றும் விஜிஏ (Video Graphics Adapter) அட்டைகளிலும் அது தொடர்ந்தது. வழக்கமான 3 துண்மி (பிட்) ஆர்ஜிபி நிறக் குறியீட்டில் (எட்டு நிறங்களைக் குறிக்கும்) நான்காவதாக ஒரு துண்மியைச் சேர்த்து (நிறத்தின் அடர்த்தியைக் குறிக்க) 16 நிறங்கள் குறிப்பிடப் பட்டன. சிவப்பு, பச்சை, நீல நிறச் சமிக்கைகளின் அடர்த்தியை ஒரே சீராக அதிகரித்துப் புதிய நிறங்கள் பெறப்படுகின்றன.

IRL : ஐஆர்எல் : மெய்யான வாழ்க்கையில் எனப் பொருள்படும் In Real Life என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் நிகழ்நிலை (on-line) பயனாளர்கள் பயன்படுத்தும் சொல். குறிப்பாக, மெய்நிகர் (Virtual) உலகில் இணைய உரையாடல், இணைய அரட்டை, மெய்நிகர் நடப்பு (Virtual Reality) இவற்றுக்கு மாற்றாகப் பொருள் உணர்த்தக் குறிப்பிடப் படும் சொல்.

IRQ : ஐஆர்கியூ : குறிக்கீட்டுக் கோரிக்கை என்று பொருள்படும். Interrupt Request என்ற தொடரின் சுருக்கம். வின்டெல் (விண்டோஸ் இன்டெல்) கணினிகளில் இயலக்கூடிய வன்பொருள் குறுக்கீடுகளின் (Hardware Interrupts) தொகுதியில் ஒன்றை ஒர் எண்ணால் அடையாளம் காணும் முறை. எந்தக் குறுக்கீட்டு கையாளியைப் (Interrupt Handler) பயன்படுத்த வேண்டும் என்பதை ஐஆர்கியூ எண் உணர்த்துகிறது. ஏடீ பாட்டை(AT bus), ஐஎஸ்ஏ மற்றும் இஐஎஸ்ஏ -களில் 15 ஐஆர்கியூக்கள் உள்ளன. நுண்தடக் கட்டுமானத்தில் (Micro Channel Architecture) 255 ஐஆர்கியூக்கள் உள்ளன. ஒவ்வொரு சாதனத்துக்கான ஐஆர்கியூ இணைப்புக் கம்பி அல்லது டிப் நிலைமாற்றி (DIP Switch) களில் நிலையாகப் பிணைக்கப்பட்டிருக்கும். விஎல் பாட்டை (VL Bus) மற்றும் பீசிஐ உள்ளக பாட்டை (PCI Local Bus) ஆகியவை அவற்றுக்கே உரிய குறுக்கீட்டு முறைமைகளைக் கொண்டுள்ளன. குறுக்கீடுகள் குறுக்கீட்டு எண்களாக மாற்றப் படுகின்றன.

IRQ conflict : ஐஆர்கியூ முரண்: ஐஆர்கியூ மோதல் வின்டெல் (Wintel) கணினிகளில் இருவேறு புறச் சாதனங்கள் ஒரே ஐஆர்கியூ மூலமாக மையச் செயலகத்தின் சேவையைக் கோருவதனால் உருவாகும் நிலைமை, ஐஆர்கியூ முரண், கணினியின் சீரான செயல்பாட்டைத் தடுக்கின்றது. (எ-டு) ஒரு கணினியில் நேரியல் துறை (Serial Port}யில் இணைக்கப்பட்ட சுட்டி (Mouse) மையச் செயலகத்துக்கு ஒரு குறுக்கீட்டை அனுப்புகிறது. ஆனால் அதே குறுக்கீட்டு எண் இணக்கி (modem) அனுப்பும் குறுக்கீட்டைக் கையாளும் நிரலைச் சுட்டுகிறது