பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

ஒரு மொழியின் உண்மையான வளர்ச்சியை, எந்த அளவுகோலைக் கொண்டு மொழியியல் வல்லுநர்கள் அளவிட்டுக் கணிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.

காப்பியம் முதலான மரபுக் கவிதை வடிவிலான இலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது புதுக்கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற நவீன புத்திலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது அம்மொழியில் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களின் பெருக்கத்தைக் கொண்டா?

இவை மட்டுமே மொழி வளர்ச்சியின் முழுமையான அளவுகோல்கள் ஆகா. 'மொழியில் புதிது புதிதாக வந்து இணையும் சொல் வளத்தை, குறிப்பாக, கலைச்சொற்களின் பெருக்கத்தைக் கொண்டே ஒரு மொழியின் வளர்ச்சியின் அளவு கணிக்கப்படும்' என்பதுதான் உலக மொழியியலார் தரும் முடிவு. இதிலிருந்து சொல் வளமே ஒரு மொழியின் உண்மையான மொழி வளம் என்பது தெளிவாகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சிச் சூழலுகேற்ப, ஆயிரமாயிரம் கலைச் சொற்கள், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் தமிழில் உருவெடுக்க வேண்டியது காலத்தின் இன்றியமையாக் கட்டாயமாகும் எனக் கூற வேண்டியதில்லை.

'இன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சி முழுக்க முழுக்க மேனாட்டவர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அவற்றிற்கான அறிவியல் கலைச்சொற்களும் அவர்களாலேயே ஆங்கிலத்தில் படைக்கப் பட்டுள்ளன. அவை உலகினரால் 'உலகப் பொதுமொழி' போன்று பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நாமும் ஆங்கில வடிவில் அப்படியே ஏற்றுப் பயன்படுத்த வேண்டியதானே? தமிழில் எதற்குப் புதிதாகக் கலைச் சொல்? வேண்டுமானால் விளக்கங்களைத் தமிழில் எழுதிக் கொள்ளலாம். முழுமையாகத் தமிழிலும் இதற்கான கலைச்சொற்களை உருவாக்குவது வீண் வேலை அல்லவா?' என்று கூறுவோரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பது போல் தோன்றினும் இக்கூற்று முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

அறிவியல் - தொழில்நுட்பக் கலைச்சொற்களில் இருவேறு தன்மை உண்டு. முதலாவது சாதாரணமாகப் பொருளுணர்த்தும் கலைச்சொற்கள். மற்றொரு வகை அசாதாரணத் தன்மைகளோடு கூடிய சிறப்புப் பொருளுணர்த்தும் கலைச்சொற்கள். இவை 'பன்னாட்டுக் கலைச்சொற்கள்' (International Technical Terms) எனப்படும். இவ்வகைக் கலைச்சொற்கள் உலக முழுவதிலும் மொழி பெயர்க்கப்படாமல் ஒலி பெயர்ப்பு மட்டும் செய்யப்பட்டு, பயன் படுத்தப்படுவனவாகும். சான்றாக, லேசர் (Laser), ரேடார் (Radar) போன்ற முதலெழுத்துச் சொற்களும் என்சைம், ஐசோடோப், ஓசோன் போன்ற சொற்-

5