பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12◇ ராசீ



அதைத் தன்னிடம் பதிவு செய்ய வேண்டும்" என்று ஆணையிட்டான்; ஜனனக் கணக்கை அவர்கள் எழுதினால் மரணக் கணக்கைத் தான் முடிப்பதாய் அறிவித்தான்.

 வஞ்சனை இல்லாமல் தேவகி மைந்தரைப் பெற்றுக் கம்சனிடம் தந்தாள். பிறந்தன ஆறு; பெருகியது இரத்த ஆறு; அவை பிறக்கும்போது மூடியிருந்த கண்களைத் திறவாமலேயே செய்துவிட்டான்.
 வசுதேவன் சளைக்கவில்லை; "சென்றது இனி மீளாது; சிந்தை செய்வதால் பயனில்லை" என்று தன் பயணத்தை மேலும் தொடர்ந்தான்; எட்டாவதனை எட்டிப் பிடிக்க ஏழு தேவைப்பட்டது. ஏழு திங்கள் தீர்ந்ததும் ஏழாம் கரு தேவகி வயிற்றில் தங்கவில்லை. அது கோகுலத்தில் உரோகிணி வயிற்றுக்கு மாற்றப்பட்டது. விஞ்ஞானம் அதற்கு உதவியது. யோக மாயை இந்த மாற்று அறுவையைச் செய்து தந்தாள்; உரோகிணி முழு நிலை வந்ததும் பூரணனைப் பெற்றுத் தந்தாள்; பலராமன் அவளுக்குத் தனயன் ஆனான். தேவகி கணக்கில் அது, கருச்சிதைவு எனக் கணக்கிடப்பட்டது.
 "மணி எட்டு எப்பொழுது அடிக்கும்?' என்று காவலர் காத்திருந்தனர். நாளும் நட்சத்திரமும் கம்சன் குறித்து வைத்திருந்தான். "ஆவணி மாதம் எட்டாம் நாள் அட்டமி திதி மாமனுக்கு ஆகாது” என்பர். அதற்காகவே அந்த நேரத்தைக் கண்ணன் தேர்ந்து எடுத்தான். கம்சன் மனத்தைப் போலவே காரிருள் சூழ்ந்திருந்தது. நள்ளிரவில் ஒள்ளியோன் பிறந்தான்.
 சங்கு சக்கரம் ஏந்திய தடக்கையனாய் அங்கு அவன் அவர்களுக்குத் திருமாலாய்க் காட்சி அளித்தான். அடுத்துச் செய்ய வேண்டியதை அவன் தொகுத்துக் கூறினான்; வசுதேவன் கால் தளை நீங்கியது; காவலர் துயில் ஓங்கியது; குறட்டை கூடிற்று.