பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ◇ ராசீ


அழைத்துச் சென்று தந்தை நந்தகோபரிடம் விட்டனர். அவரை நந்தகோபர் நன்கு வரவேற்று உபசரித்தார். அவர் உண்டு உறங்கி எழுந்ததும் மறுநாள் வந்த செய்தியைக் கேட்டு அறிந்தார்.

வில்விழாவுக்கு வருகை தரும்படி அழைத்துள்ள அந்த வீணனான கம்சன் உள்ளத்தையும், அவன் திட்டங்கள் அனைத்தையும் கூறினார்; மேலும் கம்சன் தேவகி, வசுதேவரை வாட்டிய வரலாற்றையும், அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பதையும் விவரமாய் உரைத்தார்.

கண்ணனும் பலராமனும் நந்தகோபனிடம் இந்த விழாவிற்கு யாதவ இளைஞர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வரச் சொல்லினர். போர் செய்யக் கூடிய வலிமை மிக்க இளைஞர் சிலர் உடன் வரப் புறப்பட்டனர். நந்தரும் மற்றைய இளைஞர்களும் முன்னதாய் மதுராவை நோக்கிச் சென்றனர். கண்ணனும் பலராமனும் அக்குருவர் கொண்டு வந்த அழகிய தேரில் அமர்ந்து மதுராவை அடைந்தனர். கண்ணனைப் பிரிந்த கோபியர் ஊணும் உறக்கமும் நீங்கி அவன் நினைவால் வாடினர்; அக்குருவரைப் பழித்துக் கூறினர். கண்ணன் இல்லாத கோகுலம் நிலவு இல்லாத வானமாக இருண்டு கிடப்பது போல் இருந்தது. கோபியர் அகம் சோகம் அடர்ந்ததாய் மாறியது.

மதுராவில் கண்ணன்

காலையில் பிருந்தாவனத்திலிருந்து புறப்பட்ட தேர் பகல் மத்தியான நேரம் மதுராவை அடைந்தது. அக்குருவர் தம் இல்லத்திற்கு வந்து தங்கி இருந்து பின் அவர்கள் விருப்பம் போல் எங்கும் செல்லலாம் என்று கூறினார். கண்ணன் தேரில் இருந்து இறங்கினான்; பலராமனும் இறங்கிவிட்டான். "நாங்கள் இந்த நகரைச் சுற்றிப் பார்க்க