பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ◇ ரா.சீ



"எருதுகள் ஏழனை அடக்கி, அவளை மணந்தான்" என்று கூறப்படுகிறது. பாகவதம் நப்பின்னையின் பெயரையே குறிப்பிடவில்லை; சியாமந்தக மணி என்னும் ஒரு கதைக் கருவினைக் கொண்டு கதை அமைத்திருப்பது வியப்பாயுள்ளது.

 கதை என்றால் கண்ணனின் கதைதான் எல்லா நயங்களும் பெற்றுள்ளது. கண்ணனின் விசயம், விளையாட்டு, லீலை என்னும் பெயர்கள் தாராமல் 'கண்ணனின் திருக்கதை' என்னும் தலைப்போடு வெளி வருகிறது. கதையம்சம் நிறைந்த ஒர் அதீத தெய்வ மனிதனின் கதை இது; அனைவரும் அறிந்த கதைதான்; என்றாலும் தெளிவாய் அறிய இந் நூல் துணை செய்கிறது.
 கண்ணனது அவதாரப் பெருமையைப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பாடல் நன்கு தெளிவுறுத்தும்.
 கண்ணன் வாயினுள் மண்ணைப் போட்டுக் கொள் கிறான்; யசோதை வாய் திறக்கச் சொல்கிறாள்; வாயில் மண்ணை மட்டும் அன்று; இந்த வையகம் முழுவதையும் காண்கிறாள்; மற்றைய மாதராரும் வந்து காண்கின்றனர்; அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
 "இவன் ஆயன் அல்லன்; அருந்தெய்வம், மாயப் பண்பு உடையவன்; நன்மை செய்பவன்' என்று கூறுகின்றனர்.
 "உலகம் இறைவனுள் அடக்கம்" என்னும் செய்தியை வாயினுள் வையகம் கண்ட காட்சியில் உணர்த்துகிறார். அவன் அமானுஷ்யன்: “மனிதனுக்கு அப்பாற்பட்ட தெய்வம்" என்பதை "மகன் அல்லன்; அருந் தெய்வம்" என்னும் தொடரால் உணர்த்துகிறார். "அதீத செயல்களை ஆற்றுபவன் (Super man)" என்னும் கருத்தை "மாயச் சீர் உடைப் பண்பினன்" என்று கூறி உணர்த்துகிறார்.