பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி மனோலயம் ஏற்படும்.

மனோலயம் வந்த பிறகு மேலும் மேலும் சாதனம் செய்து, அடைவதை அடைந்தவர்களுக்கு மனோ நாசம் ஏற்பட்டுவிடும். ராமகிருஷ்ண பரமஹம்சர் இதற்கு மிகவும் தெளிவான உபமானம் சொல்லியிருக்கிறார். ஒர் உப்புப் பொம்மையைக் கொண்டு நீரின் ஆழத்தை அளக்கத் தொடங்கினால் அது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போய்க்கொண்டிருக்கும். நீரின் அடிக்குப் போவதற்குள் பொம்மை கரைந்து போய்விடும். அதுபோல மனத்திலே ஒர் உருவத்தை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தால் தியானம் பண்ணப் பண்ண உடம்பு அடங்கி, வாக்கு அடங்கிப் போகும். கடைசியில் மனத்தில் புதைத்துக் கொண்ட உருவமும் போய் மனம் நின்றுவிடும். இந்த நிலைதான் சும்மா இருக்கும் நிலை.

நாம் சும்மா இருப்பது மனோலயத்தை அடைவதற்கு. முதலில் ஒன்றை மனத்தில் வைத்து மற்றவற்றை மறக்கப் பழகி விட்டால் அந்த ஒன்றையும் கடைசியில் நினைக்காமல் சும்மா இருக்கும் நிலை வரும்.

"முருகக் கடவுள் சும்மா இருக்கும் எல்லைக்குள் என்னைச் செலுத்தினான்" என்றார் அருணகிரியார். எப்படி இந்த நிலை வந்தது? சொல்லுகைக்கு இல்லை. கை இருந்தும் அது எதையும் செய்யவில்லை. கண் இருந்தும் அது எதையும் பார்க்க வில்லை. உடம்பு இருந்தும் அது இயங்கவில்லை. வாக்கு இருந்தும் அது பேசவில்லை. மனம் இருந்தாலும் அது எதையும் சிந்திக்கவில்லை. எல்லாம் இருந்தும் சும்மா இருக்கும் நிலை அது.

வள்ளி நாயகன்

யார் அப்படி விட்டான்? அதைப் பிறகு சொல்கிறார்.

இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத்
தோள் அண்ணல் வல்லபமே.

296