பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

இருக்க வேண்டும். பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்து, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சு; நல்ல பேச்சு, பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு.

இறைவன் உள்ளம் குளிரும்படி பேசுவதற்கு நமக்கு என்ன தெரியும் என்று கேட்கலாம். "நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்' என்று சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவனுடைய உள்ளம் குளிருகின்றது. அந்தப் பேச்சினாலே தனக்கு வரும் பெரிய ஊதியத்தை எண்ணியே அவன் மனம் குளிருகின்றது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்க, நாம் அவனுக்குக் கொடுப்பதாவது!

பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறது? இறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவ உபகாரம் உண்டா? இல்லை.

இதைப் பட்டினத்தார் சொல்கிறார்.
   "பொன்னாற்ப்ர யோசனம் பொன்படைத்
    தாற்குண்டு.அப் பொன்படைத்தான்
   தன்னாற்ப்ர யோசனம் பொன்னுக்கங்
    கேதுண்டத் தன்மையைப்போல்
   உன்னாற்ப்ர யோசனம் வேணதெல்
    லாமுண்டிங் குன்றனக்கே
   என்னாற்ப்ர யோசனம் ஏதுண்டு
    காளத்தி ஈச்சுரனே"

என்பது அவர் பாட்டு.

85