பக்கம்:கனிச்சாறு 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111


ஊர்களெல்லாம் 'சீரங்கம்' 'விருத்தாஜ லந்'தான்!
உடைகளெல்லாம்'மினிஸ்கர்ட்டும்,' 'கவுனும்', 'டைட்' 'பேண்ட்'டும்!
பேர்களெல்லாம் 'நடராஜா' 'ஜெயலலிதா' 'ஸ்வாகத்'!
பெயர்ப்பலகை 'அமெரிக்கா' 'இலண்டனை'ப்போல் மின்னும்!
சீர்திருத்தப் பேச்செல்லாம் 'வெங்காய' மணந்தான்!
சிண்டர்களின் வளர்ச்சி - ‘ஸுப்ர பாதம்' 'ஸத் சங்கம்'!
தேர் திருவி ழாக்களிலோ நின்றவெலாம் ஓடும்!
தெருச்சுவரில் 'தமில் வால்க!' 'எம்ஜியார் வால்க!' 9

உண்ணுகின்ற விடுதிகளின் ‘பலகாரம்', சுவையில்
உருவத்தில் பழையவைதாம்; பெயர்ப்புதுமை அடடா!
வெண்ணெயில்லை; 'பட்டர்' உண்டு! 'பொட்டொட்டோ' பொரியல்!
வெங்காயத் தோசையில்லை 'ஆணியன்'தோ சைதான்!
உண்ணுதற்குச் சோறில்லை; 'ராரைசு' 'கீ' தான்!
'பப்பட்' 'ஆனியன் புளவர்' கூட்டாம்! 'லைம் பிக்கிள்'!
தண்ணீர் இல் லை; ‘வாட்டர்'! 'டொமொட்டோ சூப்', 'கர்டு'!
தாழ்ந்துவிட்ட தமிழ் மொழியின் வீழ்ந்தநிலை காணீர்! 10

வானொலியில் 'அம்மாமி' 'அத்திம்பேர்' கொட்டம்!
வாழ்க்கையிலே பாதியினை விழுங்கிவரு கின்ற
பா நெளியும் திரைப்படத்தில் 'பம்மலக்கிடி கும்மா”!
படுக்கையறை, குளியலறை, நீச்சலுடைக் காட்சி!
தேனொலிபோல் பாவேந்தர் பாட்டெங்கோ வந்தால்
திரும்புகின்ற பல முகங்கள்; கசமுசப்புப் பேச்சு!
கூனலுடல் ஆனாலும் 'கவர்ச்சி' க்கிலை கேடு!
-குலைந்து வரும் தமிழகத்தின் கொடுமைநிலை காணீர்! 11

கல்விநலந் தேடுகின்ற மாணவர்கள் தம்மைக்
கவலையொடு நினைக்கின்றேன்! என்னநிலை ஆமோ?
செல்வநலம் மிக்கவர்கள் மேன்மேலும் வாழ்வார்;
செத்தழியும் வெறும் வயிறார் தொகைபெருகிப் போனார்!
வெல்வதினி எக்காலம், எந்தமிழர் நாட்டை?
விளைந்து வரும் கொடுமைகளை ஒழிப்பதினி எந்நாள்?
சொல்வதிலே பொய்யில்லை; அயல்நாடு சென்றீர்!
சொந்தநிலந் திரும்பாமல் நினைந்துமகிழ் வீரே! 12

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/147&oldid=1424769" இலிருந்து மீள்விக்கப்பட்டது