பக்கம்:கனிச்சாறு 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


157

ஊக்கம் இழக்கச் செய்யாதீர்!


ஆக்கம் இழைக்க உதவிலீர் ஆயினும்
ஊக்கம் இழக்கச் செய்யாதீர் எமை
ஊக்கம் இழக்கச் செய்யாதீர்!


தாக்கம் அடைந்தது தமிழினம் அல்லவோ?
தமிழ்நிலம் குலைந்தசீர் எடுத்திங்கு சொல்லவோ?
தேக்கம் அடைந்தனர் தமிழர்கள் அனைத்திலும்!
தீந்தமிழ் மொழி, இனம் தேய்ந்தன வினைத்திறம்! -ஆக்கம்

பைந்தமிழ் மொழியினை வளர்த்தல்நம் கடமையே!
பாருக்குள் தமிழரை உயர்த்தல்நம் உரிமையே!
மைந்தரும் அல்லமோ தமிழன்னைக் கின்றையே!
மடமையுள் ஆழ்ந்திடில் நலம்பெறல் என்றையே! -ஆக்கம்

மொழி, இனம், நாட்டினுக் குழைத்தல் எம்கொள்கையே!
மூச்சிலும் பேச்சிலும் செயலிலும் வெல்கையே!
பழி, துயர், இடர்க்குயாம் அஞ்சுதல் இல்லையே!
பற்பல தடை செய்தல் வினைக்கொரு தொல்லையே! -ஆக்கம்

இனம் உய்ய உழைப்பாருக் கிடர்செயல் ஞாயமா?
எதிரிகள் தொல்லை அந் நிலையினில் ஓயுமா?
மனநலம் கொண்டன்றோ துணைவரல் நல்லது!
மக்களின் வலிவன்றோ எதனையும் வெல்வது? -ஆக்கம்

எம்முடைக் கருத்தெடுத் துலகெலாம் பரப்புக!
ஏட்டிலும் உரையிலும் அவற்றையே நிரப்புக!
உம்முடை உழைப்பிலும் செயலிலும் தமிழினம்
உய்வதே குறியென வாழ்வினை நடத்துக! -ஆக்கம்

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/266&oldid=1437477" இலிருந்து மீள்விக்கப்பட்டது