பக்கம்:கனிச்சாறு 2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  245


சொந்தப் பெருமையை, நலன்களைக் காத்திட
தந்திர உத்திதான் இந்தியைத் தடுக்கும்
போராட்டம், மாநாடு, புரட்சிக்கத் தல்கள்!
பாராட்டு, மலர்மாலை, பணமும் திரட்டலாம்!
எனவே, இந்தியை எதிர்த்து விரட்டிடும்
முனைவுஏ தென்னில் தமிழ்நிலம் மீட்பதே!

தமிழ்க்கல்வி இன்னும் தழைத்திட வில்லை!
தமிழில் கற்றால் அரசுபணி தந்திடும்
என்னும் நிலைமை இருந்தால் அன்றோ
முன்வரும் மாணவர் முத்தமிழ் கற்பார்! 70
இந்தி,ஆங் கிலத்திற்கு இருக்கின்ற சலுகை
முந்தித் தமிழ்க்கு முனையாத நிலை ஏன்?
தமிழ்க்கல்வி இப்படித் தாழ்ந்திடும் போதில்
தமிழர்தம் உரிமைக்கு எத்தனைத் தடைகள்!
தங்கள் உரிமையைத் தட்டிக் கேட்டிடும்
எங்கள் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடுசிறை!
‘மிசா’ ‘என்-எசு-ஏ’ மீளாத் ‘தடாச்’ சிறை!
உசாவல் இல்லாமல் ஓராண்டு; ஈராண்டு!
என்ன கொடுமை! உரிமை இழப்புகள்!
இன்ன நிலையெலாம் எப்படி வந்தன? 80

பேசுவது ஒற்றுமை? பரப்புவது ஒருமை!
வீசுவது சட்டம்; வெஞ்சிறை; அழிப்புகள்!
அடக்கு முறைக்குமோர் அளவுஇங் கில்லையா?
வடக்கெனில் வாழ்த்து! வரவேற்பு! மாலைகள்!
தெற்கினில் கொடுஞ்சிறை? அழிப்புதான் தீர்ப்பா?
எதற்கிந்த வேற்றுமை? இதுதான் குடிமையா?
ஆட்சி, அதி காரம் அவர்க்கே சொந்தமா?
மீட்சியில் லாத மிடிமை எங்கட்கா?
என்ன இஞ் ஞாயம்? என்ன இந் நேர்மை?
என்ன நடுநிலை? என்னகுடி யரசு? 90
குடிமகன் ஒருவன் கையூட்டு வாங்கினால்
அடிதடி! வெஞ்சிறை! அதிகாரப் பறிப்பு?
முதல், தலை-அமைச்சர்கள் ஊழலில் மூழ்கினால்
புதுப்புதுப் பதவிகள்! அதிகாரப் புதுக்கல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/281&oldid=1437493" இலிருந்து மீள்விக்கப்பட்டது