பக்கம்:கனிச்சாறு 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  7

அன்னை ஒருத்தி மறத்தியன்றோ? நமை
ஆர்க்கவள் பெற்றெடுத்தாள்? - இளங்
கன்னி நறுந்தமிழ், கன்னி நறுந்தமிழ்
காத்திடுவீர் மறவீர்!

குன்றினைத் தோளெனக் கொள்கை உயிரெனக்
கூறிய(து) ஆர் தமிழா? - போர்
முன்றிற் புறமுது கிட்ட முகத்தினில்
முகம்பட விழித்தவர் யார்?

“சென்று, வென்றால்வரு வேன்; இலை வாள்வரும்;
சிறுவனுளான் அனுப்பு - அவன்
நின்று பட்டான்எனின் நின்னுயிர் அனுப்”பென
நிகழ்த்தியது ஆர் தமிழா?

கூட்டுக்குள் எத்தனை நாள் உயிர் தங்கிடும்
கூட வருவதெவை காண்! - தமிழ்
நாட்டுக் குழைத்திட, நாட்டுக் குழைத்திட
நாட்டமி லார் எவரே?

வீட்டுக் கோராள்வர, வீட்டுக் கோராள்வர
வேண்டுகின்றோம் மறவீர்! - சிறை
காட்டுக் கென்றும்சுடு காட்டுக்கென்றும், மறக்
கழலணி பெறுவோமே!

அற்றைத் தமிழ்க்குலம்! அற்றைத் தமிழ்க்குலம்!
ஆண்ட தமிழ்க் குலமே! - மொழிப்
பற்றை இழந்தனை! பான்மை இழந்தனை!
பகலில் வெருண்டனையே!

ஒற்றைத் தனியவன் ஆயினும் தமிழ்மகன்
உளங்குன் றிடுவானோ? - தனைப்
பெற்றெடுத் தாள்தமிழ்த் தாயெனின், அவள் படும்
பிழை பொறுப் பானோ?

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/43&oldid=1523575" இலிருந்து மீள்விக்கப்பட்டது