பக்கம்:கனிச்சாறு 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  55


34  தமிழ் வளர்ப்பார்....!

நயங்கூர் உரைகள் பலசெய்வார்;
நலங்காண் வினைக்கே முழுமனதாய்
இயங்கார்; பிறர் ஆங் கெழுந்தியங்கின்
இணையார்; ஒருகால் இணைந்துவிடின்
வயங்காண் பொழுதில் பொருள் நயப்பால்
வழிப்போ வார்க்கே பழிசெயவும்
தயங்கார்; இவர்காண் தமிழ்வளர்ப்பார்!
தமிழே! இதுநின் தலையெழுத்தே!

-1964



35  எழுதிப் பிழைக்கும் இடக்கர் !

பழுதுற நூற்கள் பதித்திடு வாரும்
பதித்தவெல்லாம்
புழுதியென் றாலும் புகழ்ந்துரைப் பாரும்
புகழ்ந்தவற்றைத்
தொழுதுடன் வாங்கிப் படித்திடு வாரும்
தொலைந்துவிட்டால்
எழுதிப் பிழைத்திடு வாரோ இடக்கரும்
இந்நிலத்தே!

-1964
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/91&oldid=1424767" இலிருந்து மீள்விக்கப்பட்டது