பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

13


டேன். என் பெண் பெரியவளானாள். அவளுக்கு 12 வயதிலேயே கலியாணமாயிற்று. நான் அதற்குப் போகவேயில்லை. அவர்களும் அழைக்கவில்லை. அந்தப் பெண் மறுவருஷமே ஒரு பிள்ளையைப் பெற்று ஜன்னி கண்டு செத்தாள். அந்தப் பயல் எப்படியோ வளர்ந்தான். அவளும் செத்தாள். கோர்ட்டில் ஜீவனாம்சம் போட்டார்கள். அவர்களால் வழக்காட முடியுமா? என்னிடம் நடக்குமா? ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிவிட்டேன். இப்போது, அவன், அந்த ஊரிலே ஏதோ கடை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி” என்று கூறிவிட்டு மாரியப்பபிள்ளை “கருப்பையா பையனுக்கு இப்போ என்ன வயதிருக்கும்” என்று கேட்டார். “ஏறக்குறைய இருபதாவது இருக்கும்” என்று வீராசாமிப்பிள்ளை பதில் கூறினார்.

“உங்களுக்கெப்படித் தெரியும்?” என்றார் மாரியப்பபிள்ளை. “அந்தப் பிள்ளையாண்டான் மாரிக்குப்பத்துக்கு நாங்கள் போனபோது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்” என்றார் வீராசாமிப்பிள்ளை. பிறகு வேறு விஷயங்களைப் பேசிவிட்டு, வீராசாமிபிள்ளை வீடு வந்தார். வேதவல்லியைத் தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னார். “ராதா காதில் விழுந்தால் அவள் ஒரே பிடிவாதம் செய்வாள் கல்யாணத்துக்கு ஒப்பவேமாட்டாள்; சொல்லவேண்டாம்.’ என்று வேதவல்லி யோசனை கூறினாள். எனவே ராதாவுக்கு தான் மணக்கப்போவது தன் காதலனின் தாத்தா என்பது தெரியாது. விசாரத்துடன் மாரிகுப்பத்துக்கும் இரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே வண்டியோட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த பரந்தாமனுக்கும் தெரியாது, தன் காதலி ராதா தனக்குப் பாட்டி ஆகப்போகிறாள் என்பது! காதலியே தனக்குப் பாட்டி ஆனாள் என்பது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்!