பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கபோதிபுரக்


படுத்திருந்த பக்கமாகச் சென்றான். வேதவல்லி கண்களை பிசைந்துகொண்டே, “தம்பி, போய் ஒரு விசிறி கொண்டுவா!” என்றாள், விசிறி எடுத்துக் கொண்டுவந்தான். “வீசு” என்றாள் வேதவல்லி. வீசினான். சில நிமிடங்களில் சாரதா கண்களைத் திறந்தாள். வீசுவதை நிறுத்திவிட்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பேசவேண்டியவை யாவும் தீர்ந்துவிட்டன! மெல்ல எழுந்தாள் மங்கை. தூர நின்றான் பரந்தாமன். வாத்தியங்கள் மறுபடி கோஷித்தன. புரோகிதர், கதறலானார்; கருப்பையா வந்தவர்களை உபசரித்தபடி இருந்தார். “பலபலமாக மேளம்” என்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த பதுமை போன்ற சாரதாவுக்கு, பரந்தாமனின் பாட்டன், அவன் கண் முன்பாகவே, தாலி கட்டினான். எல்லோரும் ‘அட்சதை’ மணமக்கள்மீது போட்டனர்! பரந்தாமனும் போட்டான். போடும்போது பார்த்தான் சாரதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது. “புரோகிதர் போட்ட ‘புகை’ கண்களைக் கலக்கிவிட்டது” என்றாள் வேதவல்லி. “அல்ல! அல்ல! பாழும் சமூகக் கொடுமை, அந்தக் கோமளத்தின் கண்களைக் கலக்கிவிட்டது” என்று எண்ணினான் பரந்தாமன்.

ஆம்! சாரதாவை அவன் காதலித்தான். அவளும் விரும்பினாள். அவளே, அவன் பாட்டியுமானாள். என் செய்வான், ஏங்கும் இளைஞன்?

சாரதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறியது. வேதவல்லியின் வாட்டம், இவற்றைப்பற்றி மாரியப்பபிள்ளைக்குக் கவலை ஏன் இருக்கப் போகிறது.

வீட்டிலுள்ள கஷ்டத்தினால் கழுத்தில் அணியும் நகையை விற்றுவிட்டால், வாங்குகிறவர்கள், விற்றவர்களின் வாட்டத்தை எதற்காகக் கவனிக்கப் போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானோ