பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கபோதிபுரக்


கருப்பையா, சாரதாவை அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். சாரதாவும் மிக அடக்க ஒடுக்கமாகப் பணிவிடைகள் செய்துகொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்ய வேண்டிய முறையில் துளியும் வழுவாது நடந்தாள்.

சாரதா வீடு புகுந்ததும் வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்துவிட்டது. சமையல் வேலையிலே ஒரு புது ரகம். வீடு வெகுசுத்தம். தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ, வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ சாரதாவின் சுபாவத்திலேயே கிடையாது. சாரதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், ‘இவ்வளவு நல்ல சுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள்? எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்காரமாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும், ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப்பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத்தனத்தால் கெட்டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள்தான்’ என்று எண்ணினான்.

ஆனால் சாரதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ, பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்றவில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர, புருஷனிடம் அவளுக்கு அன்பு எழவில்லை. பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான் அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளைகொண்டு போய்விட்டானே! அவள் தனது இருதயத்தை ஒரு முத்தத்துக்காக அவனுக்குத் தத்தம் செய்துவிட்டாள்.