பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கபோதிபுரக்


அது தாண்டவமாடும்போது கண்டால் அதன் பெருமையைக் காண முடியுமே தவிர வேறுவிதத்தில் காண முடியாது.

நமது குடும்பப் பெண்களில் எவ்வளவோ பேர் தங்கள் மனவிகாரத்தை மாற்ற, முகத்தில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள், வாழ்க்கையின் இன்பம் என்றால் சமையற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும் கட்டியலறையில் விளக்கேற்றுவதும் கலர் புடவை, கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவற்றைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும் தொட்டிலாட்டுவதும்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்!

அப்படிப்பட்ட வாழ்க்கைதான் சாரதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில்தான் காரியஸ்தான் கருப்பையாவுக்கு சாரதாவின்மீது கண் பாய்ந்தது. சாரதாவின் தற்கால வாழ்வுக்கு, தானே காரணமென்பது அவனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! சாரதாவைத் தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும் நடத்தையிலும் தன் எண்ணத்தை சாரதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான்.

தாகமில்லாத நேரத்திலும் ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச் சென்று பேசுவான். விதவிதமான சேலை வகைகளைப் பற்றிப் பேசுவான். சாரதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள், இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான்.

“உன் அழகைக்காண இரு கண்கள் போதாதோ” என்று பாடுவான். ராதாவைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பு.