பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

34


போட்டுக்கொண்டு, ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும்போது, அசல் ரவிவர்மா ஓவியம் போல இருக்கிறது என் கண்களுக்கு” என்பான்.

இவ்விதமாக, கருப்பையா, மிக விரைவில் முன்னேறிக்கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து, சாரதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்துகொண்டு, வாய் திறந்து கேட்டுவிடுவதே மேல் என எண்ணினான் அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது.

முதலாளி பக்கத்து ஊருக்குப் போனார். ஒரு பாகப் பிரிவினை மத்தியஸ்த்துக்காக, வர இரண்டு நாட்கள் பிடிக்கும்; அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிடத் தீர்மானித்துவிட்டான், கருப்பையா.

மாலை நேரம். தோட்டத்திலே சாரதா பூப்பறித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையா அங்குப் போனான். சாரதாவுடன் பேச ஆரம்பித்தான். சற்றுத் தைரியமாகவே, “சாரதா நீ நல்ல சாமர்த்தியசாலி.”

“நானா! உம்! என்ன சாமர்த்தியம் கருப்பையா என் சாமர்த்தியம் தெரியாதா, எட்டு மாதம் சீந்துவாரற்றுக் கிடந்தவள் தானே.”

“சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே, உன் அழகைக் கண்டால் அண்ட சராசரத்தில் யார்தான் சொக்கிவிட மாட்டார்கள்.”

“போ; கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்”

“கேலியா இது? நீ கண்ணாடி எடுத்து உன் முகத்தைக் கண்டதில்லையா?”

“சரி! சரி! நாடகம்போல் நடக்கிறதே”

“ஆமாம்! நாடகந்தான். காதல் நாடகம்.”

“இது என்ன விபரீதப் பேச்சு கருப்பையா, யார் காதிலாவது விழப்போகிறது.”