பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கபோதிபுரக்


அவளுடைய கன்னிப்பருவம் காதலைக் கண்டது! அது கருவிலேயே மாண்டது, அவளுடைய இரண்டாம் பிறப்பு கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரசமின்றி இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு வெளிக்குக் கற்புக்கரசியாகவும் மறைவில் பிறருக்குப் பெண்டாகவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள்.

கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கடடினானே தவிர மனத்திலே அன்பு என்ற முத்திரையைப் பதியவைக்கவில்லை. எனவே, அவள் கணவனிடம் கலந்து வாழ்வதைத் தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக்கொண்டாளே தவிர, அதுவே தன் இன்பம் என்று கொள்ளவில்லை.

பரந்தாமனை மணந்திருந்தால், அவளைப் பதைக்கப்பதைக்க வெட்டினாலும் பாழும்கிணற்றில் தள்ளினாலும் பயப்பட மாட்டாள். பிறனுடைய மிரட்டலுக்குக் காலடியில் கோடிகோடியாகப் பணத்தைக் குவித்தாலும் நிமிர்ந்து நோக்கியிருக்க மாட்டாள் மற்றொருவனை. அவள் காதற்செல்வத்தைப் பெறவில்லை. இவள் இன்பக்கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள்.

உலகம் தன் குற்றத்தைத் தெரிந்துகொள்ளாதிருக்கும் மட்டும் கவலை இல்லை என்று எண்ணினாள்.

‘இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி, நல்ல நல்ல நகைகள் போட்டுக்கொண்டு, கணவர் கொண்டாட ஆனந்தமாக வாழவேண்டும். அதற்கு காரியஸ்தன் தயவிருந்தால் கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் காலடியில் கிடக்கிறான். இனி தனக்கென்ன குறை! என்று