பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கபோதிபுரக்


கருப்பையா கறுத்து, வியர்க்கும் முகத்துடன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வேலியைச் சரிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் சாரதா வந்தாள். அவள், கோகிலம் செய்துவிட்டுப்போன குட்டிக் கலகத்தையும் அறியாள்; கோடியில் மரமறைவில் ‘கோடாக்’குடன் ஒளிந்துகொண்டு சிங்காரவேலன் இருப்பதையும் அறியாள். அன்றெல்லாம் கருப்பையா முகத்தைக் கோணலாக்கிக்கொண்டும், சிடுசிடுவெனப் பேசிக்கொண்டும் இருந்தது கண்டு ஒன்றும் புரியாது தத்தளித்தாள். அதனை விசாரிக்கவே அங்கு வந்தாள்.

“கருப்பையா...”

பதில் இல்லை.

“கருப்பையா...”

“கந்தன் ஒரு வேலையும் சரியாகச் செய்யமாட்டேனென்கிறான். ஆமாம் அவனுக்கு நிலைமை மாறிவிட்டது. புது கிராக்கி” என்று தோட்டக்காரக் கந்தனைச் சாக்காக வைத்துக்கொண்டு கருப்பையா பேசினான். சாரதாவுக்கு அப்போதுதான் கருப்பையா ஏதோ தன்மீது சந்தேகங்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. உடனே கோபமும் வந்தது. இருவரும் கோபித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்யமுடியும்! அதிலும் அவள் ஒரு பெண்! வழிதவறி நடந்த பெண்!! எனவே, பணிந்துபோக வேண்டியவள் தானே என எண்ணினாள். அந்த ஒரு விநாடியில் அவள் மனக்கண் முன்பு, தனது முன்னாள் நிலையாவும், படமெடுத்ததுபோல் தோன்றிற்று.

ஒருமுறை தவறினாள் – பெற்றோர்கள் தவறவிட்டார்கள் – அதுமுதல், சருக்கு மரத்தில் செல்வதுபோல, நழுவி நழுவி, வழுக்கி வழுக்கி கீழுக்கு வந்து, கடைசியில் திருட்டுத்தனமாகப் பெற்ற ஒரு முரட்டு ஆளுடன் கொஞ்சவேண்டிய நிலையும் வந்ததல்லவா, காரணமின்றி அவன் கொண்ட கோபத்துக்கும் சமாதானம் கூற