பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கபோதிபுரக்


எண்ணிக்கொண்டுதான் கருப்பையா கோபித்தான் என்பது தெரிந்து விட்டது. அவளையும் அறியாமலேயே சிரிப்பு வந்தது.

“கருப்பையா விஷயம் தெரிந்துகொண்டேன். நீ நினைப்பது தவறு. ஆண்டவனறிய கூறுகிறேன், சிங்காரவேலுவுக்கும் எனக்கும் துளியும் நேசம் கிடையாது. நீ இதனை நம்பு, வீண் சந்தேகம் வேண்டாம்” என்றாள் சாரதா உறுதியுடன்.

துளியும் தட்டுத்தடங்கலின்றி நிதானமாக சாரதா கூறியதைக் கேட்ட கருப்பையாவுக்குப் பாதி சந்தேகம் போய்விட்டது.

“கோகிலம் சொன்னாளே...” என்று ஆரம்பித்தான்.

“கோகிலம் குறும்புக்குச் சொல்லி இருப்பாள்” என்று கூறிக்கொண்டே, சாரதா, கருப்பையாவின் இரு தோள்பட்டைகளையும் பிடித்துக்கொண்டே அவன் முகத்தை நோக்கியபடி, “கருப்பையா, நான் ஏதோ இப்படிக் கெட்டுவிட்டேனே தவிர, நான் சுபாவத்தில் கெட்டவளல்ல” என்றாள். கருப்பையாவின் மனம் இளகிற்று, சாரதாவின் தலையைத் தடவினான்.

“சாரதா, கண்ணே, உன்னை நான் இழக்கமாட்டேன், உயிர் எனக்கு நீதான்” என்று கொஞ்சினான். சாரதா சிரித்தாள். கருப்பையா அவளை அருகிலிழுத்து முத்தமிட்டான்.

“கடக்” என்ற சப்தமும், “சபாஷ்” என்ற பேச்சும் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். கையில் காமிராவுடன் சிரித்தபடி சிங்காரவேலன் நிற்கக் கண்டனர்.

“ஆ! ஐயோ,”

“என்ன! நீயா!”