பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கபோதிபுரக்


வுக்குக் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. நல்ல பெரிய இடத்திலே ஏற்பாடு. நூறு வேலிக்கு நிலம். ஆடும் மாடும் ஆளும் அம்பும் வண்டியும் அதிகம். அந்த அழகாபுரிக்கே அவர்தான் ஜமீன்தார்போல. வயது கொஞ்சம் அதிகந்தான். அறுபது என்று சொல்லுவார்கள். ஆனால் அவர் நினைப்பு முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள்தான். ஆள் நல்ல உயரம், பருமன், மீசை மயில்ராவணனுக்குப் படத்திலே இருப்பதுபோல ஆசாமி பேசினால் இடிஇடித்த மாதிரிதான். அழகாபுரியிலே மாரியப்பபிள்ளை என்றால் போதும். கிடுகிடுவென நடுங்குவார்கள்.

அவருக்கு மூன்றாந்தாரமாக, சாரதா ஏற்படாகிவிட்டது. சாரதாவுக்கு வயது பதினாறுகூட நிரம்பவில்லை. அவள் அழகு, அழகாபுரிக்கே அழகு செய்தது. நல்ல பஞ்சவர்ணக்கிளி என்றாலும் சோலையில் பறக்கவிடுகிறார்களா? தங்கக் கூண்டிலே போட்டுத்தானே அத்துடன் கொஞ்சுவார்கள். அதைப்போலத்தான் சாரதாவுக்கு, மாரியப்பபிள்ளை கூண்டு. அவருடைய பணம் பேசுமே தவிர வயதா பேசும்? அதிலும் வீரசாமிபிள்ளை வறட்சிக்கார ஆசாமி. கடன் பட்டுப்பட்டுக் கெட்டவர். இந்தச் சம்பந்தத்தினால்தான் ஏதாவது கொஞ்சம் தலையெடுக்க முடியும். வேதவல்லிக்குக் கொஞ்சம் கசப்புதான். இருந்தாலும் என்ன செய்வது? சாரதாவுக்குத் தெரியும் தனக்குப் பெற்றோர்கள் செய்கிற விபரீத ஏற்பாடு. அதனை எண்ணியெண்ணி ஏங்கினாள், வாடினாள், மாரியப்பபிள்ளையை மனத்தாலே நினைத்தாலே பயமாக இருந்தது அவளுக்கு. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியதால் உடல் இளைக்கலாயிற்று. ‘ஐயோ! அந்த ஆர்ப்பாட்டக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு நான் எக்கதியாவது?’ என்று எண்ணி நடுங்கினாள் அந்தப் பெண். தனது குடும்பத்திலுள்ள கஷ்டமும், அந்தக் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளவே, தன்னை – கிளியை வளர்த்து பூனையிடம் தருவதுபோல, மாரியப்ப