பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

95

எதிர்ப்பாற்றலின் எதிரொலியாக கப்பலையே ஓட்டிக் காட்டிய வீரப் பெருமகன் சிதம்பரத்தின் நெஞ்சுரத் தியாகத்தைக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே இருந்த போதே பாராட்டிப் போற்றினார்! அதனால், காந்தியடிகளுக்கும் சிதம்பரனாருக்கும் தென்னாப்பிரிக்கக் கடிதப் பரிமாற்றங்களே அவர்களது தொடர்புகளுக்கு சான்றுகளாக இருந்தன!

அத்தகைய ஓர் அரசியல் சால்பாளர் சென்னை திரும்பிய பிறகும் கூட, ஒத்துழையாமைத் திட்டத்தால் விடுதலைப் போர் வெற்றி பெறாது என்றே அறிக்கை வெளியிட்டார். எனவே, அடிகளாருக்கும் சிதம்பரனாருக்கும் தனிமனித விரோதம் ஏதுமில்லை. கொள்கைக் கோமான்களின் களபலிப் போராட்டம் தான் நடைபெற்றது என்பதை பண்புடையார் அறிவர்!

அப்போது பிராமணரல்லாதார்கள் முன்னேற்றத்துக்காக சென்னையில் நீதிக் கட்சி ஆரம்பமானது. அதனை உருவாக்கியோர்கள் சீமான்கள், குறுநிலக் கோமான்கள், மிட்டா மிராசுகள், பண்ணையார்கள் என்பதால், கப்பலோட்டிய தமிழனின் அஞ்சாநெஞ்ச ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வ.உ.சி.க்கு அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் பல வழிகளில் அவரை நீதிக் கட்சியிலே சேர்க்க குறுக்கு வழியினை கையாண்டு பார்த்தும் கூட சிதம்பரம் என்ற அந்தப் பெருமகன் அக்கட்சியிலே சேர மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில், ஒரே சமயத்தில் ஒத்துழைத்தலும், ஒத்துழையாமையும் அரசியலில் நிகழ வேண்டும் என்று விரும்பினார். ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிப்பவர்களின் செயலை வயோதிகப் பருவத்தின் வாலாட்டம் என்றார்.