பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

வல்ல சினமாகிய கள்ளினைக் குடித்தவரும்; பிறை எயிறு இலங்க - பிறையொத்த தங்கள் பற்கள் தெரியும்படி; மூதுரை பெருகதைகளும் - பழைய பாட்டி கதைகளையும்; பிதிர்களையும் - விடுகதைகளையும்; மொழிவார் - தமக்குள் பேசிக் கொண்டு இருப்பவருமான; ஆயிரம் ஆயிரம் உறுவலி அரக்கர் - ஆயிரக்கணக்கினரும், வலிமை மிக்கவருமான அரக்கர் கொண்ட காவலை - காவல் கூடங்களை ; கடந்தான் - (அநுமன்) தாண்டி உள்ளே சென்றான்.

***


முக்கண் நோக்கினன் முறை
        மகன் அறுவகை முகமும்
திக்கு நோக்கிய புயங்களும்
        சில கரந்து அனையான்
ஒக்க நோக்கியர் குழாத்திடை
        உறங்கு கின்றானைப்
புக்கு நோக்கினன் புகை
        புகா வாயினும் புகுவான்.

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளிர் கூட்டத்திடையே உறங்கும் இந்திரசித்தனைக் கண்டான் அநுமன். குமரக்கடவுள் தனது ஆறுமுகமும் பன்னிரு கைகளும் விளங்காவண்ணம் ஒளித்துக்கொண்டு, ஒரு சிரமும் இரு கரமும் கொண்டு விளங்குவான் போல் தோற்றமளித்தான் இந்திரசித்.

***

புகை புகா வாயினும் புகுவான் - புகை நுழைய முடியாத இடங்களிலும் புகுந்து செல்லக் கூடிய அநுமன்; புக்கு - இந்திரசித்தின் பள்ளி அறையினுள்ளே புகுந்து; முக்கண் நோக்கினன் - மூன்று கண்களால் பார்க்கின்ற சிவபெருமானின்; முறை மகன் - மகன் முறை பெற்ற