பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

தன்மையைக் காத்தல்; வேண்டும் என்று - நீர் விரும்பத் தக்கது என்று; நீ விளம்புவாய் - நீ சொல்வாயாக.

***


ஏத்தும் வென்றி
        இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை சொல்லுதி
        மன் அருளால் எனைக்
காத்திருந்த தனக்கே
       கடனிடை
கோத்த வெஞ்சிறை
       வீடென்று கூறுவாய்.

இராமபிரான் இட்ட கட்டளைப்படி என்னைக் காத்து நின்றார் இளைய பெருமாள். நடுவிலே வந்து புகுந்தது இச் சிறை. இதனின்று என்னை மீட்க வேண்டிய கடமையும் உண்டு என்று அந்த இளையவரிடம் சொல்லு.

***

ஏத்தும் வென்றி இளையவற்கு - யாவரும் கொண்டாடும் வெற்றி மேம்பாடுடைய இளைய பெருமாளுக்கு; மன் அருளால் - இராமபிரானுடைய கட்டளைப்படி; எனைக் காத்திருந்த - எனக்குக் காவல் இருந்த; தனக்கே - அவர் தமக்கே; இடை கோத்த - நடுவில் வந்து புகுந்த; வெம் சிறை - வெம்மை பொருந்திய இச் சிறையிலிருந்து; வீடு - விடுதலை அளிக்க வேண்டியது; கடன் - கடமையாகும் என்று; ஈது ஒரு வார்த்தை சொல்லுதி - இந்த ஒரு செய்தியைச் சொல்லுவாயாக.

***