பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்

பிராட்டியாரைக் கண்ட அநுமன்மூலம் மண்ணின் மகள் இருக்குமிடத்தை அறிகிறான் இராமன். உடன் செயல்பட்டு அன்னையை மீட்க, மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் அடங்கியதே யுத்தகாண்டம்.

வழுவலில் வெள்ளத்தானை தென்திசை வளர்ந்தது முதல், இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் அழித்து, இராமபிரான் திருமுடி புனைந்து நின்றது வரை உள்ள வரலாறு இக் காண்டத்தில் அடங்கும். இராம காதை என்ற பெருங் காப்பியத்தின் ஆறாவது காண்டம் யுத்த காண்டம்; கம்பனின் இராமாயணத்தில் பெரும் பகுதியாக அமைந்து உள்ள இக் காண்டம் 39 படலங்களையும் 4323 செய்யுட்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது. இத் திரட்டில் 95 பாடல்களே இடம் பெறுகின்றன. இக் காண்ட நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கடற் கரையிலும் இலங்கைத் தீவிலும் திகழ்ந்தன என்றாலும், மீட்சிப்படலம், திருமுடி சூட்டுப் படலம், விடை கொடுத்த படலம், அயோத்தியில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

அறம் மறத்தை நிச்சயம் அழிக்கும் என்ற பேருண்மையைக் கூறுவதாக இராமாயணத்தைக் கொண்டாலும் அவ் வரலாறு முழுவதும் இராமனை, கருணையுடன் தன்னை அண்டினவர்க்கெல்லாம் அபயம் அளிக்கும் பரந்த மனங்கொண்ட செம்மலாகக் காண்கிறோம். பகைவருக்கும் அருளும் பண்பாளனாகக் காட்சித் தருகிறான். இராமாயணத்தை அதனால்தான் சரணாகதி சாத்திரம் என்கின்றனர் போலும்! பால காண்டத்தில் தேவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் கோசல இளவரசன்; அயோத்தியா காண்டத்தில் பரதனுக்குச் சரணாகதி தந்த