பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319


அல்லா நெடும் பெருந் தேவரும்
        மறைவாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு
        விழி பொத்தினர், இரிந்தனர்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும்
        விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு. அவை
        விலக்கும் தொழில் வேட்டான்.

இராவணன் பாணத்தால் வானர சேனைச் சிதறியது. இராமன் என்ன செய்தான்? தேவரும் வேதவிற்பன்னரும் அஞ்சித் தம் கையைக் கொண்டு இரு கண்களையும் பொத்தினர்; வானர சேனை முழுவதுமே சிதறிய காலை, இராமன் தன் அம்பினால், இராவணனின் அம்புகளை விலக்கினான்.

***

அல்லா - (சிவபெருமான்) அல்லாத; நெடு பெருதேவரும்- நீண்டு சிறந்த தேவர்களும்; மறைவாணரும் - அந்தணர்களும்; எல்லார்களும் - (ஆகிய) யாவரும்; (இராவணன் எய்த அம்புகளின் பெருமைகளைக் கண்டு), அஞ்சி - பயந்து, கரம் கொண்டு - தம் கைகளைக் கொண்டு; இரு விழி - (தம்) இரண்டு விழிகளையும்; பொத்தினர்; இரிந்தனர் - மூடிக்கொண்டு இடம் விட்டுப் பெயர்த்தார்கள்; சேனை - (வானர) சேனை; ஆயிரம் செல் விழுங்கால் - ஆயிரம் இடிகள் ஒரே நேரத்தில் விழும்போது ; உகும்-(பொடியாகிச்)சிந்தும்; விலங்கு - மலையை; ஒத்தது - ஒத்துச் சிதறிற்று. அது கண்டு - அந்த நிலைமையைப் பார்த்து; வில்லாளனும் - வில்லை ஆள்வதில் வல்லவனான இராமபிரானும்; அவை - (இராவணன் எய்யும்) பாணங்களை; விலக்கும்படி - தடுக்குமாறு; விரைந்தான் - விரைவு கொண்டான்.

***