பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

கம்பராமாயணம்



என்னைத் தொடர்ந்தான்; நான் வேகமாய்ப் பறந்து செல்ல உன் தந்தை உதவினான்” என்றது.

காற்றில் மிதக்கும் கவிதையாய் இருந்தது அந்த சொற்கள் அவனுக்கு.

“நான் காற்றுக்குச் செய்யும் வந்தனை இது; நீ அதன் மைந்தன், இங்கு இருந்து உண்டு களைப்பாறிச் செல்க” என்றது.

“தான் காற்றின் மைந்தன் என்பதால் தன்னை உபசரிக்கக் கடலுள் மறைந்திருந்த மைந்நாக மலை மேல் எழுந்தது” என்பதை அறிந்தான் அனுமன்.

“நன்றி; நான் உல்லாசப் பயணம் மேற்கொண்டு உலகம் சுற்றச் செல்லவில்லை; கடமை எனக்குக் காத்திருக்கிறது; கடலைக் கடந்து காகுத்தன் துணைவி யைக் காண வேண்டும்; வேகமாகச் செல்கிறேன்; வழிவிடு” என்றான்.

அதன் வேண்டுகோளை ஏற்றுத் திரும்பி வரும்பொழுது தங்குவதாய்த் தெரிவித்தான். நந்தனுக்கு வழிவிட்ட நந்தியாய் அது வழிவிட்டுக் கடலுள் ஆழ்ந்தது.

சுரசை தடுத்தல்

அனுமன் ஆரணங்கினைக் கண்டு அறியக் கடலைக் கடக்கும் ஆற்றலும், அரக்கரை எதிர்க்கும் வீரமும் உள்ளனவா? என்று அறிய விண்ணிடை வாழும் தேவர் விரும்பினர். அதற்காகச் சுரசை என்ற அரமகள் ஒருத்தியை அரக்கி வடிவில் அவன்முன் அனுப்பி வைத்தனர்.