பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

கம்பராமாயணம்



பெண்களும் அவனைச் சூழ்ந்து வரவும் சீதையிருக்கும் இடம் நாடி வந்தான்; அரக்கியரையும் அரம்பையரையும் விலகச் சொல்லித் தான் மட்டும் தனியனாய்ச் சீதையை நெருங்கினான்; அவள் கடும்புலிக்கு நடுங்கும் இளமான் ஆனாள்; ஆசை வெட்கம் அறிவதில்லை; நாக்கூசாமல் தன் ஆசைகளை வாய்விட்டுப் பேசினான்; தன்னை அவள் அடைவதால் அவளுக்கு உண்டாகும் நன்மைகளை எடுத்து உரைத்தான்.

“செல்வச் சிறப்பும் ஆட்சிப் பொறுப்பும் உடைய என்னை மதிக்காமல், காட்டில் திரியும் அற்ப மனிதனாகிய இராமனைக் கற்பு என்னும் பேரால் நினைத்துக் கொண்டிருப்பது அறியாமை; வாழத் தெரியாமை” என்று அறிவித்தான்.

அவளை அடையாமல் அவதிப்படும் தன் மன வேதனையைப் பலவாறு எடுத்துக் கூறினான்; “'அருள் இல்லாமல் தன்னை இருளில் விட்டுக் கஞ்சத் தனமாய் நடந்து கொள்ளும் வஞ்சிக்கொடி, என அவளைச் சாடினான்; தன்னை அவள் கூடாவிட்டால், தான் அவளை அடையாவிட்டால், உயிர் விடுவது உறுதி” என்று இயம்பினான்.

அவன் அடுக்கு மொழிகளைத் தடுத்து நிறுத்த விரும்பினாள். “இனி இதைப் பொறுப்பதில்லை” என்று சீறிச் சினந்தாள்.

அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறி, அவன் கொடுமைகளைச் சாடினாள்; ‘வஞ்சனையால் மான் ஒன்றனை ஏவித் தன்னை வலையில் சிக்க வைத்தது