பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

253



தீமைகள் அழியும்; இராமனுக்கு இழுக்கு எனக் கருதி அதற்கு அவள் வாய்ப்புக் கொடுக்கவில்லை; “இராமனின் வீரத்துக்கு மாசு கற்பிக்கிறாய்” என்றாள்.

‘தப்பித்துச் செல்ல நினைப்பதைவிட உயிர் விடுவதே மேல்’ என்பதைச் சுட்டிக் காட்டினாள்.

காவிய நாயகி கடுஞ்சொற்கள் அவனை அடக்கி வைத்தன; வீர மறக்குலத்தில் பிறந்த பாரதப் பெண் மணியைக் கண்டான்; “வாழ்க்கை கிடைக்கிறது” என்பதற்காக அவள் தாழ்ந்து போக விரும்பவில்லை; வீர சுதந்ததிரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது.

இராமனிடம் சொல்ல வேண்டிய செய்திகளைக் கனிந்த மொழிகளால் அனுமனிடம் அவள் சொல்லி அனுப்பினாள்.

“சிறந்த என் மாமியர்க்குச் “சீதை இறக்கும்போது உங்களைத் தொழுதாள் என்ற செய்தியை இராமன் என்பால் அருள் இல்லாத காரணத்தால் மறந்தாலும் நீ சொல்ல மறக்க வேண்டாம்”.

“அரசனாய்ப் பிறந்ததால் உரிமை கொண்டு மற்றொரு தாரத்தை அவன் மணக்க நேரிடலாம்; அதனைத் தடுக்க முடியாது, என்றாலும், மறுதாரம் மனித இயல்படி குற்றம் என்பதை அவனுக்குச் சாற்று. எழுதாத சட்டம் அவனைத் தடுத்து நிறுத்தும்; அதில் எனக்கு நம்பிக்கை உண்டு; அவன் அதீத ஆடவன் என்பதை என்னால் மறக்க முடியாது”.