பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தக்கவர்கள் வாயிலாகக் கம்பனது அறிமுகம் நமக்குக் கிடைக்குமாயின் நாம் கம்பனை விடமாட்டோம். எனக்குக் கம்பனது அறிமுகம் கிடைத்த வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

அறிமுகம் செய்தவர்கள்:

1) யான் 1935-36-ஆம் ஆண்டு காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தில், புலவர் புகுமுகத் தேர்வுக்குப் (Entrance) படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கம்பராமாயணத்திலிருந்து, ‘சூளாமணிப் படலம்’ பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மடத்தின் ஐந்தாம் பட்டத்து அடிகளாரும் அந்தக் காலத்தில் தமிழ் உலகம் முழுவதும் பெரும் புகழ்பெற்றுத் திகழ்ந்தவருமாகிய ‘சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிக சிவாசாரிய அடிகளார்’ எங்களுக்குச் சூளாமணிப் படலம் நடத்தினார்கள். அந்தக் கலை முழுவதையும் துய்ப்பதற்கு ஏற்ற வயது அப்போது இல்லையெனினும்,இலக்கியச் சுவையுணர்விற்கு அடிகளாரால் வித்து ஊன்றப் பெற்றது. பொதுவாகக் கம்பராமாயணத்தில்-சிறப்பாகத் தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சிபெறுவதற்கு அப்போது அடிகோலப்பட்டது. எனவே. கம்பனை எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்கள், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ஞானியார் மடத்து ஐந்தாம் பட்டத்து அடிகளாரேயாவார்கள் .

2) புலவர் புகுமுக வகுப்பில் தேர்ந்ததும், புலவர் (வித்துவான்) பட்டப் படிப்புக்காகத் திருவையாற்று அரசர் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். கல்வி ஆண்டு 1938-39 என்று நினைக்கிறேன். பெரியார் புருடோத்தம நாயுடு அவர்களால், கம்பராமாயணத்தில் புலவர் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த அயோத்தியா காண்டம்