பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கார் மிகவும் எச்சரிக்கையுடன் ஒடியது.

ராயபுரம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் அவனுக்கு நண்பன் ஒருவன் இருந்தான்.

பெயர் : காளமேகம்.

அவன் எழுத்தாளன்.

அவன் ஞானபண்டிதனுக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு அனுப்பியிருந்தான். தன் இல்லத்தில் இரவுச் சாப்பாடு உண்ண வேண்டுமென்பது அவன் இஷ்டம். இவனும் சம்மதித்தான். பள்ளிப் படிப்பின் சிநேகம் !

காளமேகம் வீட்டின் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான், ஞானபண்டிதனை எதிர்பார்த்து.

இருவரும் அன்பால் ஆரத் தழுவிக்கொண்டார்கள்; அளவளாவினார்கள். தன் கதைகளையெல்லாம் தன் நண்பனிடம் காண்பித்தான் காளமேகம். “நான் பி. அண்ட் ஸி-யில் வேலைபார்க்கிறேன் — டையிங் செக்ஷனில், எழுதுவது உபதொழில். வருமானத்தை உத்தேசித்து இப்படிச் சொன்னாலும், எழுதுவது என்பது என் வரை ஒர் ஆர்வத்தின் கிளர்ச்சியாகவே தோன்றியது. இங்கே எழுத்தை நம்பிப் பிழைப்பதென்பது துர்லபம். ஏதோ ஒன்றிரண்டு பேர்களால்தான் முடிகிறது. அதற்கும்கூட அவரவர்களுக்கென்று சில சலுகைகளும் பல செல்வாக்குகளும் துணையிருக்கின்றன. ஒருசிலர் அப்பட்டமாகத் திருடித் திருடி எழுதிப் பேர் சம்பாதித்துப் பணமும் சம்பாதித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சிலரது முகமூடிகளைக் காலமும் பொது மக்களும்தான் கிழித்தெறிய வேண்டும்,” என்று ஆத்திரத்துடன் பேசினான் அவன்.

இலக்கியத் திருட்டைப்பற்றிக் கேட்டதும், ஞானபண்டிதன் வெகுண்டான். புதுமைப்பித்தனின் பிரபலமான வாசகத்தை நினைவூட்டி, மேற்படி ஈனப்பிழைப்பை வெகுவாகச் சாடினான் “அந்நிய நாடுகளில் இப்படிப்பட்ட தகராறுகளே எழுவதில்லையாம். எழுத்தாளர்கள் என்றால் அங்கெல்லாம் ஒரு தனி அந்தஸ்தும் செல்வாக்கும் பொதுவாகவே உண்டு. வசதியான, சம்மானமும் கிடைக்கிறதாம். ஒழுக்க உணர்வு உள்ளத்திலும் உடலிலும் ஊறிப் பண்பட்டுவிட்டால், எல்லாமே தன்னைப் போலச் சரியாகிவிடும்!” என்றான்.