பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கற்பனைச்சித்திரம்



சொன்னேன், அந்த ஆள் பிடிவாதக்காரன் நூறானாலும் ஆயிரமானாலும் தருகிறேன், குட்டி கட்டாயம் கொடுத்தாக வேண்டுமென்று "ஆர்டரே" போட்டுவிட்டார். நான் என்ன செய்வது! அடுத்த தடவை கட்டாயம் உனக்குத் தருகிறேன்" என்றார் தனபால செட்டியார். சுகானந்தத்துக்கு கோபந்தான். கேவலம் ஒரு நாய்க்குட்டி, அதைத் தர மறுக்கிறானே, என்று கோபந்தான், ஆனால் அந்தக் 'கேவலம்' கலெக்டர் துரை வீட்டுக்கு அல்லவா குடி போகிறது. என்ன செய்வது! அடுத்ததடவை ஆகட்டும் என்ற பதிலை, தன் மகனுக்கு கொஞ்சம் மெருகு பூசித்தந்தார். சிங்காரத்துக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது, என்ன செய்வது? டிப்டி கலெக்டர், இன்கம்டாக்ஸ் ஆபீசர், என்று சொல்லிவிட்டபிறகு, இவன் என்ன கூற முடியும், சிங்காரத்தின் சார்பிலே தேவா ஆஜரானாள்!

'என்னப்பா இது ! நமக்கு எவ்வளவு வேண்டியவர் சுகானந்தம். அவருக்குக் கொடுத்தால் என்ன? இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு நாய் வேண்டுமென்று யார் கேட்டார்கள், நீங்களாகத்தானே வலியவலியப் போய் கேட்கிறீர்கள் நாய்க்குட்டி வேண்டுமா, என்று' என்று தேவா வழக்குத் தொடுத்தாள். தனபாலச் செட்டியார் சிரித்தார், தேவாவின் உலக ஞானசூனியத்தைக் கண்டு!

'பைத்தியமம்மா நீ! நானாக வலியப்போவதாகக் கேலிசெய்கிறாயே, இன்கம்டாக்ஸ் ஆபீசர் வீட்டுக்கு மட்டுமல்ல டிப்டி கலெக்டர் வீட்டிற்கும் நானாகத்தான் சென்று, நாய்க்குட்டி வேண்டுமா என்று கேட்டேன். இன்னும் ஒரு குட்டி இல்லையே என்று வருத்தமும் படுகிறேன், உனக்கென்ன தெரியும் அந்த விஷயம்' என்று கூறினார்.

"இன்னொரு குட்டி இருந்தால் சுகானந்தத்துக்குத் தரலாம் என்று நினைக்கிறீரா? ஐயோ பாவம், அவ்வளவாவது உங்க சிநேகிதர் மீது அன்பு இருக்கிறதே அது போதும்" என்று தேவா கொஞ்சம் படபடப்பாகப் பேசி-