பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன்

129


இந்த உறவு முதன் முதலில் எவ்வாறு தொடங்கிற்று என்பதை விளக்குவோம். முதலாம் இராசராசன் காலத்தில்தான் (கி. பி. 985-1014) இடைக்காலத்துச் சோழர்களின் புகழ் பல்வகையானும் சிறப்புற்றோங்கியது. நாட்டின் பரப்பும் விரிந்தது. இராசராசன் கி. பி. 985-ல் அரியணை ஏறனான். கி. பி. 972 முதல் 989 வரை கீழைச் சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாடு உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது.[1] அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முதலாம் இராசராசன் தன் மகனாகிய முதலாம் இராசேந்திரனை ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்று அந்நாட்டைத் தனக்குரிமையாக்கிக் கொண்டதுடன் அந்நாட்டு மன்னனாகிய விமலாதித்தனையும் சிறை பிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.

இராசராசன் விமலாதித்தனைச் சிறைவீடு செய்து தன் மகள் குந்தவையை அம்மன்னனுக்கு மணமியற்றித் தந்தான். அஃதுடன் அமையாமல் அவன் நாட்டையும் அவனுக்கு வழங்கி, அதனை ஆட்சி புரியும் உரிமையையும் அளித்தான். விமலாதித்தன் கி. பி. 1015 முதல் கி. பி. 1022 வரை ஆட்சி புரிந்து வந்தான். விமலாதித்தனுக்கு இராசராச


  1. வேங்கி நாடு என்பது கிருஷ்ணா, கோதாவரி என்ற இரு பேராறுகளுக்கும் இடையில் கீழ்க்கடலைச் சார்ந்துள்ள ஒருநாடு. அந்நாட்டை ஆண்டுவந்தவர்கள் கீழைச் சளுக்கியர்கள்.