பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமானுஜன்

76

இராமானுஜன்

சேர்ந்தபோது ஆளவந்தார் காலம் அடைந்துவிட்டிருந்தார். அப்போது அவருடைய கையில் மூன்று விரல்கள் மூடியிருந்தன. அதற்குக் காரணம் அவருக்கு மூன்று விருப்பங்கள் இருந்தமையே என்று அறிந்தார். அவைகளை நிறைவேற்றுவதாக இராமானுசர் சொன்னதும் விரல்கள் விரிந்தன என்பர்.

சிறிதுகாலம் சென்றபின் இராமானுசர் துறவறம் பூண்டு, எதிராசர் என்ற பெயருடன் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் திருமந்திரத்தின் பொருளை அறிந்துகொள்வதற்காகத் திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று உபதேசம் பெற்றார். குரு அதை யாருக்கும் கூறக்கூடாது என்று ஆணையிட்டிருந்தார். ஆனால் இராமானுசர் எல்லோரும் உய்யவேண்டுமென்று கருதி, மக்களைக் கூட்டுவித்து எல்லோருக்கும் விளக்கிக் கூறினார். குரு கோபம் கொண்டார். இராமானுசர் தாம் நரகம் அடைந்தாலும் பிறர் நன்மையடையவேண்டுமென்று கருதியே வெளியிடுவதாகச் சொன்னார். அதைக் கேட்டுக் குரு மகிழ்ச்சியடைந்து, அவருக்கு உடையவர் என்ற பெயரை அளித்தார். அதன்பின் இராமானுசர் பிரம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி முடித்தார். திருக்குருகைப் பிள்ளானைக்கொண்டு திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற பாஷ்யத்தை எழுதச் செய்தார். தம் சீடரான பராசர பட்டரைக்கொண்டு சகஸ்ரநாம பாஷ்யத்தை வெளியிடச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாருடைய விருப்பங்களை நிறைவேற்றினார்.

அதன்பின் மைசூர் முதலிய பிரதேசங்களில் 12 ஆண்டு வைஷ்ணவ மதப் பிரசாரம் செய்து வந்தார். மைசூர் பிரதேசத்திலிருந்தபோது பஞ்சம சாதியார்கள் அவருக்கு அதிக உதவியாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்னும் பெயரை அளித்து, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் கோவிலுக்குள் போகவும், குளங்களில் குளிக்கவும் அனுமதி அளித்தார். வேதங்களைக் கற்கவும் பஞ்ச சம்ஸ்காரம் பெறவும் அனுமதியளித்தார். அது இன்றுகாறும் நடைபெற்று வருகிறது. பிறகு ஸ்ரீரங்கம் வந்து ஆசாரியராக இருந்து வந்தார். தம்முடைய இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்ததும் அடியார்களைக் கூட்டுவித்துத் தம்முடைய குறைகளைக் குறித்து மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அறநெறி வழுவாமல் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 1137ஆம் ஆண்டு எம்பெருமான் அடி சேர்ந்தார்.

இராமானுசர் உபய வேதாந்தத்தை வெளிப்படுத்தினவர். வடமொழியிலுள்ள உபநிஷதம், பிரமகுத்திரம், கீதை என்பவைகளின் முடிபுகளையும், தமிழ் வேதமாகிய ஆழ்வார் பிரபந்தங்களின் போதனைகளையும் சமரசப்படுத்தி, ரிஷிகளும் ஆழ்வார்களும் ஒரே உண்மையைப் போதித்தவர்கள் என்பதை அவர் நிலைநாட்டினார். அவரிடத்துத் தத்துவமும் அனுபவமும் ஒன்றாக இணைந்து நின்றன. இராமானுசர் தமது நூற்றாண்டிலேயே பாரதநாடு முழுவதும் சென்று, மூன்றுவிதப் பிரமாணங்களால் பேதம், அபேதம் முதலிய சுருதிகளைச் சமரசப்படுத்தி, ஞானம், பக்தி இரண்டும் ஒன்றே என்று வற்புறுத்தி வைணவ மதத்தை எங்கும் நிலைநாட்டினார். பி. என். ஸ்ரீ.

இராமானுஜன் (1887-1920) இந்தியக் கணித மேதை. இவர் ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தை கும்பகோணத்தில் ஒரு துணிக்கடையில் கணக்குப்பிள்ளையாக இருந்தார். இவர் முதலில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், பின்னர் நகர உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். அக்காலத்திலேயே இவர் சில சமயங்களில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடுவது வழக்கம். இரண்டாவது பாரத்தில் படிக்கும்போதே இவர் கணக்கியலில் ஆர்வம் மிக்கு, இத்துறையில் வல்லவராக வேண்டுமென முடிவு செய்தார். பள்ளியில் இருந்த போதே இவர் கல்லூரி வகுப்புக்குரிய கணித பாடங்களில்

இராமானுஜன்

தேர்ச்சிபெற்றுப் பிறருடைய உதவியின்றி ஆயிலரின் தேற்றங்களைத் தாமாகக் கண்டறிந்தார்.

1903-ல் இவர் மெட்ரிகுலேஷனில் சிறப்பாகத் தேறி, உபகாரச் சம்பளத்துடன் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கணிதத்திலேயே நாட்டம் செலுத்தி, மற்றப் பாடங்களில் அக்கறை காட்டாததால் பலமுறை முயன்றும் இவர் பல்கலைக்கழகத்தின் முதலாவது பரீட்சையிலே தேறவில்லை.

1909-ல் இவருக்கு மணமானபின் இவர் வேலை தேடவேண்டியதாயிற்று. இம்முயற்சியில் இவர் பல இன்னல்களை அடைந்தார். கடைசியாகச் சென்னைத் துறைமுகக் காரியாலயத்தில் இவருக்குக் குமாஸ்தா வேலை கிடைத்தது. அப்போதும் இவர் தம் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து, அவற்றைக் கணிதக் கழகப் பத்திரிகையில் வெளியிட்டார். இவரது மேதை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இருந்த பல அறிஞர்களின் கவனத்திற்கு வந்தது. சென்னைப் பல்கலைக் கழக உதவியுடன் இவர் ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரான ஹார்டி இவருடைய பெருமையை அறிந்து, இவரை இங்கிலாந்திற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார். முதலில் அங்குச் செல்ல மறுத்த இராமானுஜன் 1914-ல் இங்கிலாந்து சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது கணித அறிவை வளர்த்து, இவருடைய மேதை முழுப் பொலிவுடன் மலர உதவியது. அங்கே இருந்தபோது இவருக்குக் கொடிய நோய் கண்டது. சிறந்த சிகிச்சை செய்தும் இந்நோய் குணமாகவில்லை. நோயினால் மெலிவுற்றும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. 1918-ல் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி இவரை ஓர் அங்கத்தினராகத் தேர்ந்தெடுத்துக் கௌரவித்தது. இப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர் இவரே. 1919-ல் இவர் தம் நாட்டிற்குத் திரும்பினார். இவரைக் குணப்படுத்த நண்பர்கள் செய்த பெருமுயற்சி பயனளிக்கவில்லை. அடுத்த ஆண்டு இவர் மறைந்தார். மறைவதற்குச் சில நாட்கள் முன்வரைகூட இவர் முக்கியமான கணி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

எண் கொள்கை என்ற கணிதத் துறையில் இவர் செய்த பணி மிக முக்கியமானது. நீள்வட்டச் சார்புகளையும், தொடரும் சார்புகளையும் இவர் ஆராய்ந்து பல புது உண்மைகளைக் கண்டுபிடித்தார். இவருடைய ஞாபகத்திறன் பிறரைத் திகைக்க வைத்தது. "ஒவ்வோர் எண்ணும் இவருடைய நெருங்கிய துணைவர்" என ஓர் அறிஞர் கூறினார். இயற்கணிதத் துறையில் செய்த புதிய ஆராய்ச்சிகளில் இவர் ஆயிலர் (த. க.), ஜாக்கோபி என்ற மேனாட்டுக் கணித அறிஞர்களுக்கு