பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘அமிர்தம்’ என்ற என்னுடைய சிறு கதைத் தொகுப்பிற்கு தாங்கள் அருளிய முன்னுரையின் இடையிலே தலைகாட்டும் வாசகம் இது.

காதலை எழிற்கனவுக்கு அடிக்கடி நான் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். நம் இருவருடைய காதல் விளக்கங்களும் ஏறக்குறைய ஒரே குரலில்தான் ஒலிகாட்ட முடியும் சொர்க்கத்திற்கும் கனவுக்கும் நடுவில் அகப்பட்ட அகல்யா, இந்திரனிடம் அகப்பட்டு ஏமாந்து, அப்பால் கனகலிங்கத்தினிடம் அகப்பட்டு அனுதாபப் பொருளாகிறாள்.

இந்த அனுதாபமே கதைக்குக் கருப்பிண்டம் என்பது என் எண்ணம்.

இந்த அனுதாபம் தான் கதையின் பிரதான பாத்திரம்! அனுதாபத்தின் இருவேறு கிளைகள்தாம் அகல்யாவும் கனகலிங்கமும்.

அகல்யாவின் துயரக் கதையைக் கேட்டு வருந்தும் கனகலிங்கம் அவள் பேரில் அனுதாபம் கொண்டு, அதன் விளைபயனாக, நம்முடைய அனுதாபத்தையும் சுவீகரித்துக்கொள்ள முயன்றான். அவன் ‘உத்தமன்!’

கற்பனை மெருகிழந்த தன் துயரப் பெருங்கதையைச் சொன்ன அகல்யாவுக்கு வாழ ஆசை துடிக்கிறது. எனவே கனகலிங்கத்தையே தன்னுடைய உயிர்ப் பிடிப்பாகப் பற்றக் கனவு காண்கிறாள். அதுவே சொர்க்கமெனவும் மகிழ்கிறாள். சமுதாயத்தின் அனுதாபத்தை அடைய வேண்டு மென்பதற்காகச் சாக விரும்பாத அவள் தசரத குமாரனாலும் கைவிடப்பட்டு நடுத்தெருவிலே நிற்கும் நிலையில், ‘அட கடவுளே! பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா நீ என்னைப் படைத்தாய்?’

133