பக்கம்:களத்துமேடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

களத்து மேடு

யும் ஊடாடியது. ‘கண்ணாலத்துக்கு நிக்கிற ஒரு பொண்ணை வூட்டிலே வச்சிட்டு, அப்பன்காரர் எம்புட்டுக் காலமா இந்தக் கமுக்கமான கூத்தை நடத்திக்கிட்டு இருந்திருக்காங்களோ, தெரியலையே? ஓரொரு தீக்கம் எப்பவாச்சும் வேளை தப்பி வூட்டுக்கு வாரதைத் தவிர, மத்தப்படி அப்பன்காரக ஒரு ராத்திரி கூட அயலிடத்திலேயோ, அசலூர்லேயோ ராத்தங்கினதே கிடையாதே?... என்னைப் பெத்தயும் இடுசாமமும் நேர்ந்திருக்க ஏலுமா?... அப்பனைக் கைக்குள்ளாற போட்டுக்கிட்டு சொக்குப் பொடி தூவி மசக்கி வச்சிருக்கிற புண்ணியவதி இன்னம் என்னென்ன கூத்து ஆடக்காத்திருக்காளோ, அதுவும் அந்த ஆத்தா காட்டேறிக்குத் தான் வெளிச்சம்!...’ என்ற நினைவுகளை முறுக்கேற்றிக் கொண்டே வட்டிச் சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தாள் தைலம்மை.

அந்நேரத்தில் சேர்வை உள்ளே நுழைந்தார். அவரை முந்திக்கொண்டு சுருட்டுப்புகை உள்ளே நுழைந்தது. ‘சிவன்மார்க்’ சுருட்டு அவரது உதடுகளில் பற்றி எரிந்ததென்றால், சேர்வைக்கு எக்கச்சக்கமான மனக்குழப்பம் என்று அர்த்தம். ஒரு பக்கம், அவருக்கும் அவரது உடன் பிறப்பான வெள்ளையப்பன் சேர்வைக்கும் பங்காளிக் காய்ச்சல் வலுத்து, ஊர்ப்பஞ்சாயம் செல்லாமல், அடி பிடி ஏற்பட்டு கடைசியில் சட்டத்தின் வாசலை எட்டிப் பிடித்த நேரத்தில், அவருக்கு இந்தச் சுருட்டுத்தான் ஆறுதல் தந்தது, ஊர் உதவவில்லை; உறவு உதவவில்லை. “உங்க ரத்தத்திலே ஊறின பாசத்தை ஏய்ச்சுப்போடாதீங்க. உங்க தம்பிக்கு உண்டான சமபங்கு மண்ணைத் தர்மத்துக்குக் கட்டுப்பட்டுப் பிரிச்சுக் கொடுத்திடுங்க. பிறத்தியார் சொத்துக்கு நீங்க ஆசைப்படுறது தெய்வம் திருவுளத்துக்கு அடுக்காது!.... நீங்க அக்கரைச் சீமையிலே சம்பாரிச்ச சொத்தை ஆரூறத்துக்கே ஒரு ஆண்வாரிசு கூட இல்லாம இருக்கையிலே, நீங்க இப்பிடி அடாவடி அடிக்கிறது சுத்தத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/105&oldid=1386231" இலிருந்து மீள்விக்கப்பட்டது