பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

பாடாயிற்றாக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போத்து, உப்பூரிகுடிகிழாருழைச் சங்கமெல்லாஞ் சென்று, இவ்வார்த்தை யெல்லாஞ் சொல்லி ஐயனாவான் உருத்திரசன்மனைத் தரல் வேண்டுமென்று வேண்டிக் கொடுபோத்து, வெளியதுடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாத்தணித்து, கன்மாப்பலகையேற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரே வழிக் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தோறுங் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தாள். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கென்றார்.

“அதனால் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்குரை யென்பாருமுளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனரால் உரைகண்டு. குமாரசுவாமியாற் கேட்கப்பட்ட தென்க.”[1]

இறையனார் அதன் உரையும் எழுதப்பட்ட வரலாற்றை அறிந்தோம். இனி இவைபற்றி ஆராய்வோம்.

முரண்பட்ட செய்திகள்

கடைச்சங்கத்தார்க்கு இலக்கண நூலாகத் தொல்காப்பியம் இருந்தது என்று உரைப்பாயிரம் கூறுகிறது. இன்னொரு இடத்தில் பொருளிலக்கணம் கிடைக்காமல் இடர்ப்பட்டனர் என்று கூறுகிறது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தொல்காப்பியப் பொருளதிகாரம் அக்காலத்தில் மறைந்து போயிற்றா? அப்படிக் கருதுவதற்கு இடமில்லை. ஏனென்றால் தொல்காப்பியம் பொருளதிகாரம் உட்பட முழுவதும் இப்போதும் இருக்கிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைத்திருக்க ஆலவாயிற் கடவுள் அறுபது சூத்திரங்கள் அடங்கிய புதியதோர் அகப்பொருள் நூலை உண்டாக்கிக் கொடுத்த காரணம் என்ன?

ஒரு விளக்கம்

இந்த முரண்பாட்டுக்கு வினக்கங் கூறுவது போல உரைப்பாயிரம் இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறுகிறது: “அரசன் இனி நாடு நாடாயிற்றாகலின் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந்தலைப் பட்டிலே மென்று வந்தார்,” என்று உரைப் பாயிரம் கூறுவதிலிருந்து தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைத்திருந்தும் அதற்குப் பொருள் கூற வல்லார் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.


  1. இறையனாரகப் பொருள், முதற் சூத்திர உரைப்பாயிரம்