பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி140

இப்பிரதிகள் அனைத்தையும் நீங்கள் கூர்ந்து வாசித்தீர்களேயானால் இவர்களது முன் தீர்வுகளுக்கு (apriori judgements) முற்றிலும் பொருந்தாத தரவுகளை அவர்களே முன் வைத்திருப்பது விளங்கும். களப்பிரர் காலத்தை இருண்ட காலம் எனச் சொன்ன அடுத்த வரியிலேயே அக்கால பவுத்த ஆசிரியர் புத்ததத்தரின் 'அபிதம்மாவதார'த்தின் இறுதியில் காவேரிப் பட்டணம் குறித்துச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளதைக் குறிப்பார் நீலகண்ட சாஸ்திரி, வளம் நிறைந்த வணிகர்கள், பெரிய அரண்மனைகள், தோட்டங்கள், துரவுகள் எனக் காவிரிப் பூம்பட்டிணம் சிறந்திருந்ததையும், காவேரிக்கரையில் புத்தமங்கலத்திலிருந்த புத்த விகாரைகள் குறித்தும், மூவேந்தர்களையும் சிறை வைத்த அச்சுத களப்பாளனைப் பற்றியும் சொன்ன அடுத்த கணமே' 'எனினும்...' என இருண்ட காலக் கதையாடலைத் தொடங்குவார் சாஸ்திரியார்.

கே.கே.பிள்ளையும் அவ்வாறே களப்பிரர் காலத்தில் வச்சிரநந்தியால் உருவாக்கப்பட்ட திரமிள சங்கத்தின் சிறப்புகளைச் சொல்வார். மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி, யசோதரா காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் உருவான காலம் இது எனக் குறிப்பிடும் பிள்ளை, வஞ்சிமா நகரில் மணிமேகலை முன்பாக பல் சமய அறிஞர்கள் தத்தம் திறன்களை எடுத்துக் கூறிய காட்சியை விவரித்து, அக்காலத்து மக்களின் பண்பாட்டு மேம்பாட்டையும். அறிவின் உயர்ச்சியையும் சமயப் பொறையையும் வியப்பார். எனில் களப்பிரர் காலத்திய குழப்பமும் இழப்பும் அளவில எனத் தான் கொண்ட முடிவின் அடிப்படை யாது என அவர் விளக்க எத்தனிக்கவில்லை. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் மக்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் என்று களப்பிரரைச் சொன்னாரென்றும் அவர் சுட்டிக் காட்டவில்லை.

தொகுத்து நோக்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. களப்பிரர் காலத்துத் தமிழக வரலாற்றை விளங்கிக் கொள்ள வினய வினிச்சயம், அபிதம்மாவதாரம் சீவக சிந்தாமணி முதலான அவைதீகப் பாரம்பரிய நூற்களை ஏற்க இவர்கள் தயாராக இல்லை. சைவத்தையும், வடக்கிலிருந்து இங்குப் போந்த வைதீக மரபையும் இந்த மண்ணுக்குரியதாக ஏற்றுக் கொண்டு வரலாறு எழுதத் துணிந்த அவர்கள் கிட்டத்தட்ட அதே கால சுட்டத்தில் (கி.மு.3ம் நூ) இங்கு நுழைத்து பரவிய சமண, பவுத்த அவைதீக மதங்களைப் புறச்சமயங்களாகக் கருதினர். சைவத்தை இம்மண்ணுக்குரிய இயல்பான ஒழுங்கு எனக் கருதியதன் விளைவாகவே சமணமும் பவுத்தமும் ஏற்றம் பெற்ற ஒரு காலகட்டத்தை ஒழுங்கு குலைத்த ஒரு தொடர்ச்சியின்மை (interregnum) யாகக் கருதினர்; சமணத்தையும் பவுத்தத்தையும் ஆதரித்த களப்பிரரை ஏதிலராகக் (அந்நியராக) கட்டமைத்தனர். கருநாடகத்திலுள்ள இன்றைய சிரவண பௌகோளாப் பகுதியிலிருந்து வந்தவர்களாகக் களப்பிரர்கள் இருக்க வேண்டும் என்பது வேங்கடசாமி உட்படப் பலரும் சொல்கிற முடிவு. சங்ககாலத்தில் அப்பகுதி எருமை நாடு என அழைக்கப்பட்டது. இன்றைய தேச எல்லைப் புவியியல் அடிப்படையில் அன்றைய எருமை நாட்டை அந்நிய தேசமாகக் கட்டமைப்பது பொருந்தாது.