பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

காஞ்சி வாழ்க்கை


எல்லாம் எழுதி இருக்கிறேன். காங்கிரஸ்காரர்களும் தாங்கள் பதவிக்கு வந்தால் அதையே முதலில் ஒழிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இருபது ஆண்டுகள் பதவியில் இருந்த காலத்து அதை வளர்த்து வந்தார்களேயன்றி வேறு ஒன்றும் செய்யவில்லை. இன்றைய அரசாங்கமும் அதை வளர்க்கவே துணை நிற்கின்றது. அதை நடத்துகின்றவர் நாட்டிலுள்ள பெருஞ் செல்வர்கள் என்றும் அவர்தம் தயவை நாடியே எந்த அமைச்சரவையும் செயலாற்றுகிறதென்றும் ஆகவே யார் வந்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பலர் காரணம் கூறக் கேட்டறிந்தேன். அந்தக் காலத்திலெல்லாம் அதன் கொடுமையை மட்டும் ஓரளவு உணர்ந்திருந்தமையின் அங்கே நடைபெற்ற கூட்டத்துக்குச் செல்ல அஞ்சினேன். எனினும் மற்றவர்களோடு சென்று கூட்டத்திலும் கலந்துகொண்டேன். கவர்னருக்கும் அறிமுகம் செய்துவைக்கப் பெற்றேன். அக்காலத்திலெல்லாம் கவர்னர்களைக் காணுவதோ பேசுவதோ அவ்வளவு எளிதன்று. எனவே எனக்கு அது பெருமை என்று பலர் கூறிக்கொண்டனர். ஊரில் உள்ள உறவினர் பலர் பாராட்டினர். எனினும் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை.

அதுகாலை செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளர் (Collector) திரு. செட்டூர் என எண்ணுகிறேன். என் கூட்டங்கள் பலவற்றிற்கு அவர் தலைமை வகித்துள்ளார். அவர்கள் எனது பணிகளை யெல்லாம் கண்டு என்ன நினைத்தார்களோ அறியேன். ஒருநாள் தாசில்தார் துவாரகா நாதஐயர் அவர்கள் திடீரென என் வீட்டிற்கு வந்தார்கள். காலையில் ஏதோ பணியில் ஈடுபட்டிருந்தேன். என்னைப் பெயரிட்டு உரிமையோடு அவர்கள் அழைப்பார்கள். அவர் தம் அழைப்பைக் கேட்டு வெளியில் வந்தேன். நாற்காலியில் உட்கார்ந்தோம். அவர் என் பெயர் ‘இராவ்சாகிப்’ பட்டத்துக்கு சிபார்சு செய்யப்பெற்றுள்ளது என்றும் காஞ்சிபுரம் வட்டத்துக்கு இவ்வொரு பெயர் தான் என்றும் கூறிவிட்டு,