பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

காஞ்சி வாழ்க்கை


அர்ப்பணித்தார் எனலாம். நான் எதிலும் ஒதுங்கி இருப்பது போன்று, அதிலும் அதிகப் பங்கு கொள்வதில்லை. ஆயினும் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் அவர்கள் குறிக்குமிடத்துக்குச் சென்று சொற்பொழிவாற்றி வருவேன். அவர்கள் என்பால் அன்றும் இன்றும் அன்புடையவர்களாகவே உள்ளனர். என் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சான்றாக இன்றும் திருஞான சம்பந்த முதலியார் கூட்டங்களில் என் பெயரைச் சொல்லி எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதையும் ஈண்டு எண்ண வேண்டியுள்ளது.

இவற்றுக்கிடையில் நான் முன்னரே காட்டிய நாாாயண சேவாச்சிரமத்தில் ஆண்டுதோறும் குரு பூசைப் பணி செம்மையாக நடைபெறும், பல அறிஞர்கள் சமயச் சொற்பொழி வாற்றுவார்கள், நான் காஞ்சிபுரம் சென்று சேர்ந்த அதே ஆண்டில் திரு.சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணுமலையிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். என்னைச் சேவாச்சிரமத்து அடிகளார் அழைத்து எப்படியும் அந்த ஆண்டிற்குச் சேதுப்பிள்ளையை அழைத்து வரவேண்டுமென்று கட்டளையிட்டார்கள். நானும் மகிழ்வோடு சென்னை சென்று அவர்களை வருமாறு வேண்டி ஏற்பாடு செய்து வந்தேன். அவர்கள் அந்த ஆண்டு வந்து ஆற்றிய சொற்பொழிவு மிகமிக உருக்கமாக இருந்தது. அவரை அனைவரும் பாராட்டினர். அதுதான் அவருக்கு முதல் தடவை காஞ்சிபுரப் பயணமும் பேச்சும். அந்தப் பேச்சு முடிவில் நன்றி கூற வந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் பிள்ளையார்பாளையம் திரு. சுவாமிநாத முதலியார் அவர்கள் மிக உருக்கமாகவும் அழகாகவும் நன்றி கூறினர். ‘இந்தச் சேதுவைக் கண்டால் பாவும் போமே ஜனகன் பெண்ணே-இகபர சித்தியாமே!’ என்று கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையில் சேதுவைக் காட்டி இராமன் சீதைக்கு தலப் பெருமையை விளக்கியதைச் சுட்டி, அப்படியே ‘இந்தச் சேதுவைக் கண்டால் யாவும் பெறலாம்’ என்று போற்றி, சேதுப்பிள்னையைச் சிறப்பித்து நன்றி கூறினார். அடிகள் மிகவும் மகிழ்ந்தார்கள்.