பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

காஞ்சி வாழ்க்கை


என்ற அதிர்ச்சி ஒருபுறம் என்னைத் தாக்கிற்று. மாநாடு தொடங்கச் சிறிதுநேரம் இருந்தது. இருவரும், இன்னும் சிலரும் உட்கார்ந்திருந்தனர். நான் அஞ்சி அஞ்சி அவர்கள் அருகில் சென்றேன். வணங்கினேன், பாரதியார் அவர்தம் கணீரென்ற குரலில் ‘வீரனே வா’ என்றார். நான் திகைத்தேன்-நையாண்டி செய்கிறாரா என எண்ணினேன். ‘இவனைத் தெரியுமா?’ என்று அடிகளாரை அவர் கேட்டார். ‘அவர் என் மாணவ ரன்றோ’ என்ற பதில் அடிகளாரிடமிருந்து வந்தது. ‘ஆமாம் ஆமாம் மறந்துபோனேன்’ என்று கூறி என்னை ‘வீரன்’ என்று அழைத்தமைக்குக் காரணம் காட்டினார். ‘இவன் அன்று செய்த செயல் சரிதான். எனினும் ஆசிரியரை விடக்கூடாது என்ற காரணத்தால் இவனைக் கடிந்துகொண்டேன். வகுப்பிற்கு வாராது தேர்வு எழுதி முதல்வனாக வெற்றிபெற்றான். (அவர் சொல்லித்தான் நான் முதலிடம் பெற்றதறிந்தேன்.) எனினும் எனக்குள் ஓர் அச்சம் இருந்தது. இவனை—இவனொடு பழகியதிலிருந்து–ஒரு வீரனாக நினைத்தேன். எங்கே திரும்பிவந்து மேல் வகுப்பில் சேர்ந்து கோழையாகிவிடுவானோ என அஞ்சினேன். ஆயினும் இவன் என்மதிப்பில் உயர்ந்தே விட்டான். என் எண்ணத்தை நிறைவேற்றி வீரனாகிவிட்டான். இனி அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் கவலை இல்லை–கொள்கையின் வீரன் என்பதைக் காட்டிவிட்டான்’ என்று விளக்கினார். அடிகளார் புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. நானும் என் அச்சம் நீங்கி அருகில் சென்று பின்பக்கமாக இருவர் இடையிலும் நின்றேன். இருவரும் என் முதுகைத் தைவந்து ‘நீடு வாழ்க’ என வாழ்த்தினர். அந்த வாழ்த்தின் வலத்தாலேயே இன்றும் ஓரளவு அமைதி பெற்ற உள்ளத்தோடு அன்னைத் தமிழுக்குப் பணிசெய்து கொண்டு வாழ்கின்றேன். அத்தகைய பெரியவர்களின் தெளிவும் அறிவும் திண்மையும் செறிவும் சான்றாண்மையும் தளரா உறுதியும் எனக்கு உற்றுழி உதவி, நான் என் வாழ்நாளைக் கழிக்க உதவியாகின்றன.