உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காதல் நினைவுகள்


“சிங்கக் குழந்தைகளை — இனிய
        செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே — அங்கமே
        பூரிக்க ஈன்றிடுக.
திங்களும் செங்கதிரும் — எனவே
        செழிக்க நல்லாயுள்”
இங்கெழும் என்வாழ்த்து — மொழிகள்
        எய்துக அவ்விருவர்!

தும்பியும் மலரும்

கரந்தப் பொடியைத் தென்றல் — வாரிக்கொண் டோடி
அகம் நொந்த தும்பி எதிர் - அணியாகச் சிந்தும்!
வகை கண்ட தும்பி தன் — வயிடூரியக்கண்
மிகவே களிக்கும் அவள் — விஷயந் தெரிந்தே!
“பூப்பெய்தி விட்டாள்என் - பொற்றாமரைப் பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு — வர வேண்டுகின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்” என — நெஞ்சில் நினைக்கும்;
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை — அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி — அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் — புதுநாதன் உண்ண
வழிபார்த் திருந்தாள் உடல் — மயலாற் சிவந்தாள்!
தழையும்பண் ணொன்று வரத் — தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ் தாமரைப் பெண் இதழ்க் — கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆ! — ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் — இசை பாடி வந்தான்
கமழ் தாமரைப் பெண் இதழ்க் — கையால் அணைத்தாள்.

தமிழ் வாழ்வு

மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல்
திறக்கப் பட்டது; சேயிழை ஒருத்தி,
முத்தொளி நெய்து முடித்த ஆடையும்,
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும்
உடையவ ளாக உலவு கின்றதை
“மருது” தனது மாடியி னின்று
கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்!