பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96. அன்பு மிக்கவர் யார்?


சிவபெருமான் தன் வாம பாகத்தில் அன்னையை வைத்திருக்கிறான். மாதிருக்கும் பாதியனாகிய அவனோடு பிரிவின்றி ஒட்டி இணைந்திருக்கிறாள் அன்னை. அவள் இமாசல அரசனின் மகள்; நல்ல குலத்தில் உதித்த மங்கையாகிய அவளைத் தேவரும் பிறரும் அறிய இறைவன் திருமணம் செய்து கொண்டான்.

அவள் ஓர் குலமங்கை;
பாகத்து அகலாள்.

அந்தப் பெருமான் தன் தலையில் கங்காதேவியை வைத்திருக்கிறான். எப்போதும் அவனுடைய சடாபாரத்தில் தங்கியிருக்கும் பெருமாட்டி அவள். ஜலமங்கையாகிய இவளும் அவன் சடையிலிருந்து பிரியாமல் தங்கியிருக்கிறாள்.

இவள் ஓர் சலமகளும் ஈதே.

பாகத்தில் ஒருத்தியையும் தலையில் ஒருத்தியையும் தாங்கிக்கொண்ட சிவபெருமானுக்கு அந்த இருவரும் மனைவிமார்கள். உமாதரனாகிய அவன் கங்காதரனுமாக இருக்கிறான்.

கங்கையை இறைவனுடைய மனைவியாகச் சொல்வது மரபு.

“கங்கையாளோ வாய்திறவாள்
கணபதியோ வயிறுதாரி
அங்கை வேலோன் முருகன் பிள்ளை”