உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 53 கொல்ல முடியுமா என்பதைக் கண்டறிய மட்டும் இதைச் செய்யச் சொன்னதாகக் கொள்ளாமல், வாலி இராமனைக் கொன்று விடுவானோ என்ற அச்சத்தாலும் இவ்வாறு செய்யச் சொன்னதாகக் கொள்ளலா மல்லவா? முறுவல் செய்தல் சுக்கிரீவனது வேண்டுகோளைக் கேட்ட இராமன் புன் முறுவல் பூத்தான்; சுக்கிரீவனது கருத்தை உய்த்துணர்ந்து கொண்டான்; தன் வில்லில் நாணேற்றி மிகப் பெரிய மராமரத்தை அணுகினான்: "மறுவிலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி எறுழ்வலித் தடங் தோள்களால் சிலையை நாணேற்றி அறிவினால் அளப்பரியவற் றருகு சென்று அணைந்தான்” ~, (2) மறுவிலான் = சுக்கிரீவன். வானவர்க்கு இறைவன் . திருமாலின் தெய்வப் பிறவியாகிய இராமன். எறுழ் = வலிமை. அறிவினால் அளப்பரியவை = மராமரங்கள். இந்த மராமரத்தை அம்பெய்து துளை பார்க்கலாம் என்றால், சிலருக்குச் சினம் வரக்கூடும். என்னால் முடியாது என்றெண்ணி என்னைச் சோதிக்கிறீர்களா? அங்ஙன மெனில், நான் ஒன்றும் அம்பெய்ய மாட்டேன் - என்று மறுத்து விடக்கூடும். போதிய வலிமையும் அரசியல் அறிவும் இல்லாதவர்களே இவ்வாறு சினத்தல் கூடும். ஆனால், எல்லாத் திறனும் உடைய இராமன் நிலைமையைப் புரிந்து கொண்டு, இது எனக்குக் கடினமான செயலன்று - மிகவும் எளிய செயல் என்னும் பொருளில் புன்முறுவல் பூத்தான். எள்ளல், இளமை பேதைமை, மடன் என்பன பற்றி நகை (சிரிப்பு) தோன்றும் எனத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார்.