பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xii

இசைவழியான பண்கள் இவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளன. தியாகராசருடைய கீர்த்தன மெட்டுகளில் பாட்டுகள் பல அமைந்துள்ளன. தேவார திருவாசக இசைநடைகளைப் பின் பற்றிய பாடல்களும் இந்நூலின்கண் உள்ளன. மெட்டு குறிப்பிடாமல் இராகம் இன்னது தாளம் இன்னது என்ற குறிப்புகளை மட்டும் பெற்றிருக்கிற பாடல்களும் உள்ளன. இவைகளல்லாமல், நாட்டுப்புற மக்கள் விரும்பிப் பாடுகின்ற தெம்மாங்கு , சிந்து ஆகிய மெட்டுகளிலும் பாடல்கள் அமைத் திருக்கிறார். பாவாணரவர்களின் இளமைக் காலத்தில் நாடக மேடைகளில் புகழ் மிக்க பாடல்களாகக் கருதப்பட்டிருக்கக் கூடிய "தசரத ராஜகுமாரா" முதலிய பாட்டுகளின் மெட்டுகளில் இந்த நூல் பாடல்கள் அமைந்திருக்கின்றன. போதாக் குறைக்கு அக்காலத்தே பாமர மக்களால் பெரிதும் மகிழ்ந்து பாடப்பட்டுவந்த 'மேரே மவுலடில்லா' முதலிய ஒரு சில உருது பாட்டுகளில் அமைந்த பாட்டுகளும் இந்த நூலில் காணப் படுகின்றன. இவற்றைக் கருதிடும்போது, பாவாணர் அவர்களிடத்திருந்த இசையார்வம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிக் கிடவாமல், எல்லைகள் பலவற்றையும் கடந்து சுதந்தரமாக யாண்டும் சிறகடித்துப் பரந்துகொண்டிருந்தது என்பது நன்கு தெரியும்.

இயேசு பெருமானின் பிறப்பு முதல், அவருடைய ஊழியமும் பாடுகளும் உயிர்பெற்றெழலும் இடையாக, அவர் திரும்பவருதல் ஈறாகச் செந்தமிழ்ச் சுவை சொட்டச்சொட்ட பத்திச் சுவை பெருகப் பெருகப் பாடப்பட்டுள்ள பாட்டுகள் இந்த நூலில் உள்ளன. பாவாணர் இந்த நூலின்கண் இடையே கிறித்துவின் பாடுகளின் பெருமையை எடுத்துரைக்கும் முறையில், தம்முடைய கிறித்தவ மன உறுதிப் பாட்டின் அருமையை இனிய எளிய உரைநடையில் எடுத்துரைக்கிறார். எனவே, இந்த நூலினை 'உரையிடையிட்ட பாட்டு' எனவும் ஓதி மகிழலாம்.