பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

மொழிப் பேரறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் (1902-1981) பெரும் பகுதியில் வாழ்ந்தவர். இந்நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களுக்குள்ளே பன்மொழிப் புலமையுடன், தமிழ் மொழி, இனம், பண்பாடு இவற்றின் மீது தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையில் பற்று மிகக் கொண்டவர் என்றால் மிகையாகாது. இவற்றின் தலைமைக்காகவே, தன்னேரில்லாத் தன்மைக்காகவே தமது வாழ்வினைத் தியாகமாக்கியவர். அண்மையில் சங்கத் தமிழ் மதுரை மாநகரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிலே பங்குகொள்ளச் சென்று தம் உயிர்போலப் பாராட்டி வந்த தமிழ் மொழியின் பெருமை குறித்துச் சொற்பெருக்காற்றியதோடு அவருடைய உயிரும் உலகத் தமிழ் மாநாட்டுச் சூழலுடன் கடவுளின் திருவடிகளை அடைந்தது. அவர் உயிர் நீத்தும் இன்றும் பேசுகின்றார். அவர் தமிழ் மொழிக்கும், இனத்திற்கும், பண்பாட்டிற்கும் செய்த அருந்தொண்டினை அவருடைய ஆராய்ச்சி நூல்கள் பலவும் பேசுகின்றன. தமிழ் மொழியும், உலகமும் உள்ளளவும் அந்நூல்கள் பேசிக்கொண்டே இருக்கும்.

தூய்மையும், நேர்மையும், துணிவும், நற்பண்பும் நிறைந்த அவருடைய வாழ்க்கையை உருவாக்கியவர் இயேசு பெருமான் என்னும் உண்மையை இங்கு அறிவித்தல் வேண்டும். இயேசு கிறித்துவின் வாழ்க்கை சிறப்பாக அவருடைய சிலுவைப் பாடுகள் அவரைப் பெரிதும் இளமை முதற் கொண்டே ஆட்கொண்டன. இதற்குச் சான்றாக விளங்கு வது அவருடைய கிறித்தவக் கீர்த்தனம் என்னும் இந்நூலாகும்.