பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 14


நின் கருணை நினைந்து அழுகிறேன்!


இறைவா, பாவம். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீ என்னை வளர்க்க எவ்வளவு அல்லற்படுகிறாய்? ஆனால், நான் முற்றாக உன்னுடன் ஒத்துழைப்பதில்லை. ஏன், இறைவா உனக்கு இந்த வேலை? ஒன்றுக்கும் உதவாத என்னைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு என்ன ஆள் பஞ்சமா? இருக்காதே. ஆம், இறைவா, அதுதான் நின் கருணை! நீ அற்பம் என்று எம்போன்றாரை இகழ்வதில்லை. அதுதான் உனது பெருமை. இறைவா, நீ இங்ஙனம் வலியவந்து ஆட்கொண்டாய், அடிமையாக்கிக் கொண்டாய். உன் கருணையை நினைந்து நினைந்து அழுகிறேன். அருள் செய்க! என் வாழ்க்கையைப் புனிதமாக்கி அருள் செய்க!