பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

111






ஏப்ரல் 4


தண்ணீர்போல் மன்னுயிர்க்குப் பயன்பட்டு வாழ அருள் செய்!

இறைவா! தண்ணீர் எவ்வளவு அருமையான பெயர். தண்ணென்ற தண்மை அளிப்பது தண்ணீர். உயிர்க்குலம் அனைத்தும் உயிர்ப்புடன் தழைத்து வளரத்துணையாயிருப்பது தண்ணிர். இறைவா, தூய்மைக் கேடுகளை நீக்கித் தூய்மை செய்யவும் தண்ணீர் பயன்படுகிறது. இறைவா, "நீரின்றமையாது உலகு" என்ற திருவள்ளுவர் வாக்கு அப்படியே உண்மை இறைவா.

இறைவா, தண்ணீரை நோக்க நோக்க நான் மிக மிக அற்பமாகத் தோன்றுகின்றேனே. இறைவா, நான் தண்ணீரை விட உயர்ந்தவன்தான். ஆனால், செயலில் என்னிடம் தண்ணளியில்லையே, பசுமையான எண்ணங்கள் இல்லையே. ஏன் இறைவா? நான் முதலில் தண்ணீரைப் போல் ஈரநெஞ்சுடன் வாழ அருள் செய்க; எங்கும் எதிலும் பசுமையைக் காணும் ஆர்வத்தினைத் தந்தருள் செய்க!

தூய்மை! அகத்திலும் தூய்மை, புறத்திலும் தூய்மை காத்திட வரம் தா! தூய்மையே அருள் நிலை, இறைவா, நான் தண்ணீரைப்போல் மன்னுயிர்த் தொகுதிக்குப் பயன்பட வாழும் வரத்தினைத்தா!