பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நவம்பர் 1


இறைவா என் செவிகள் எனக்கு உய்வைத் தருவனவாக
அமைந்திட அருள்க!


இறைவா என் செவிகள் எனக்கு உய்வைத் தருவனவாக அமைந்திட அருள்க! இறைவா! தோடுடைய செவியை உடைய பெரு மானே! என் செவிகள் செல்வத்தைச் சேர்க்கும் செவிகளாக விளங்க அருள் செய்க!


செவிச் செல்வம் எது? செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்! உனது பொருளுடைய புகழைக் கேட்டலே செல்வம்!


குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே! "நன்றுடையான், தீயதில்லான், இன்பன் காண், துன்பங்கள் இல்லாதான் காண்” என்றெல்லாம் நின் புகழ் கேட்கப்படுதல் வேண்டும்! இறைவா, கேட்கப் பெற்ற நின் புகழ் என் சிந்தனையாக வளர, அறிவாக மாற்றம் பெற வேண்டும்! நின் புகழ்மிக்க குணங்கள் என் வாழ்வாக அமைந்திட அருள் செய்க! நான் குறைகள் இல்லாது வாழ்ந்திடுதல் வேண்டும். குற்றங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்! நன்றே கேட்க வேண்டும்! நன்றே செய்ய வேண்டும்! நல்ல வண்ணம் வாழ்ந்திடுதல் வேண்டும்! இறைவா, அருள் செய்க!


இறைவா, என் செவிகள் என்னை வளர்க்கும் செவிகளாக அமைதல் வேண்டும்! என் செவிகள் எனக்கு உய்வைத்தரக் கூடியனவாக இயங்குதல் வேண்டும்! இதுவே, எனது வேண்டுகோள்! தோடுடைய செவியனே! தோன்றாத் துணையாயிருந்து அருள் செய்க!